ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

தமிழகம்

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு இன்று (செப்டம்பர் 26) தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ரம்மி விளையாடி வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்களும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி பணத்தை இழப்பதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர்.

இதுதொடர்ந்து வாடிக்கையாகி வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அவசர தடைச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

online rummy ban bill approved in tamilnadu cabinet meeting

இக்குழு தனது அறிக்கையினை கடந்த ஜூன் 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரிடம் அளித்தது.

இந்த அறிக்கைமீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த தடைச் சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது.

இக்குழு 27.06.2022 அன்று தனது அறிக்கையினை சமர்ப்பித்தது. மேற்கண்ட அறிக்கை அதே நாளில் அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

online rummy ban bill approved in tamilnadu cabinet meeting

அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பற்றி பள்ளிக் கல்வித் துறை வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு,

பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்துப் பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில்,

சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 29.08.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அக்கூட்டத்தில், இந்த அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதற்கு இணங்க அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு,

இன்று (26.09.2022) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

பாஜக கூட்டணி வேண்டாம்: என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி!

ஆர்.எஸ்.எஸ். பேரணி: உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.