தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 9) தீர்ப்பு வழங்கியுள்ளது
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததால் அரசிதழில் வெளியிடப்பட்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் அமலுக்கு வந்தது.
இதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிதி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம் “ரம்மி சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் குடும்ப வறுமைகளை கவனத்தில் கொண்டு தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் லாட்டரி, குதிரை பந்தயங்களுக்குத் தடை விதித்தது போல தான் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு தடை விதிக்க முடியாது” என்று வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்தநிலையில், ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதா வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, “ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான தமிழக அரசின் அரசாணை செல்லும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் நிறுவனங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும். அதேநேரத்தில் திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பளித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றிய ஓபிஎஸ்
டூவீலருக்கு அபராதம் 2000 ரூபாய்… ஆனால், ஆம்னி பஸ்சுக்கு ரூ. 1768தான்- தீபாவளிக்கும் தொடரும் கொள்ளை!