போனஸ் வழங்கி மக்களை ஆன்லைன் நிறுவனங்கள் அடிமையாக்குகின்றன என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று (ஆகஸ்ட் 14) வாதிடப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கொண்டு வந்தது.
ஆனால் தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துகின்ற கூட்டமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதில், “ரம்மியை நேரில் விளையாடும் போது தான் அதனை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இந்த விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.
இதில் விளையாடுவோரின் அறிவுத் திறன் எப்படி சரிபார்க்கப்படுகிறது என்பதற்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் விளக்கம் அளிக்கவில்லை. ஆன்லைன் விளையாட்டுகளில் வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது.
ஆன்லைன் விளையாட்டில் கிடைக்கும் பரிசுத் தொகையில் ஒரு பகுதி நிறுவனத்திற்கு செல்கிறது” என்று வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது.
தொடர்ந்து, இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது, “ஆன்லைனில் 24 மணி நேரமும் விளையாட முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் விளையாடக் கூடாது என கட்டுப்பாடு விதிக்க முடியாது.
வீட்டில், அலுவலகத்தில் இருந்து ஆன்லைனில் விளையாட முடியும் என்பதால் இதை முறைப்படுத்த இயலாது. கிளப்களில் மாலை நேரங்களில் தான் ரம்மி விளையாட அனுமதிக்கப்படுகிறது.
5,000 ரூபாய் செலுத்தி விளையாடினால் 5250 ரூபாயை வழங்குகிறார்கள். இது நேரடியாக விளையாடும் போது நடக்காது. ஒரு நண்பரை சேர்த்தால் 5000 ரூபாய் வழங்குகிறார்கள். இதுபோல வேறு ஏதேனும் திறமைக்கான விளையாட்டுக்கு வழங்குகிறார்களா?
போனஸ் வழங்கி அடிமையாக்குகின்றனர். இதன் மூலம் விளையாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன. வழக்கமான ரம்மி விளையாட்டை விட இது முழுக்க முழுக்க வித்தியாசமானது. இதை அனுமதிக்க கூடாது என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
2,000 கோடி ரூபாய் வரை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. இதை அனுமதித்தால் எல்லா விளையாட்டுக்களிலும் நுழைந்து விடும். ஆன்லைனில் விளையாடுபவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடியாது. எதிரில் விளையாடுபவர் யார் என்றோ, கார்டுகளை கலைத்து போடுபவர் யார் என்றோ தெரியாது.
போனஸ் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளால் அடிமையாக்கி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி பொது ஒழுங்கை பாதிக்கச் செய்கிறது” என்று ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையை சுட்டிக் காட்டி வாதிடப்பட்டது.
தொடர்ந்து, “மற்றவர்களின் திறமையை பயன்படுத்தி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. இந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. சூதாட்டத்தில் திறமை கிடையாது.
தமிழகத்தில் தான் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில் விளையாட்டுக்களை நடத்த தடையும் இல்லை. மாநில மக்களின் குறிப்பாக சிறார்கள் நலனை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆன்லைன் நிறுவனங்கள், மக்களை சுரண்டி, சூதாட்டம் நடத்துவது அடிப்படை உரிமையல்ல. இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல” என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதங்களுக்காக விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
மோனிஷா
திமுக எம்.பி கதிர் ஆனந்த் மீதான வழக்கு : தடை விதித்தது உச்சநீதிமன்றம்!
திருநாவுக்கரசு செய்தது மிகப்பெரிய பாதகம்: செல்லூர் ராஜூ