ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்டோபர் 7) ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளால் பலர் உயிரை மாய்த்துக் கொள்வது தமிழகத்தில் அதிகரித்துள்ளது. எனவே இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் பணத்தை வைத்து விளையாடக்கூடிய சூதாட்ட விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துவதற்கு அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. சட்டமன்றம் கூடாத காலங்களில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்காக கொண்டு வரப்படுவது தான் அவசர சட்டம்.
அந்த வகையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் இந்த அவசர சட்டத்துக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதை ஆளுநர் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது. சட்டமன்றம் கூடுவதற்கு முன்பாக ஆளுநர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பாரா, இல்லையா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்தநிலையில் தமிழக சட்டமன்றம் அக்டோபர் 17 ஆம் தேதி கூடும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். இதற்கிடையில் ரம்மி உள்பட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (அக்டோபர் 7) ஒப்புதல் அளித்துள்ளார்.
அக்டோபர் 1ம் தேதியே அவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பும் அரசிதழில் வெளியாகி இருக்கிறது.
இதனால் நாளை (அக்டோபர் 8) முதலே ஆன்லைன் விளையாட்டு தடை அவசர சட்டம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைக்கான நிரந்தர சட்ட மசோதாவை சட்டமன்ற கூட்டத்தொடருக்கு அடுத்த நாளான அக்டோபர் 18 ஆம் தேதி முதலமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார்.
கலை.ரா
இந்த கேரக்டரிலா சுஷ்மிதா சென்?
அக்டோபர் 17: சட்டமன்றத்தில் பன்னீர் இருக்கை-அப்பாவு பதில்!