கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக பெற்றோர் தரப்பில் சமூகவலைதளங்களில் புகார் முன்வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில்
மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (online class) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
எனவே கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மிரட்டும் கனமழை… ஒரேநாளில் எகிறிய காய்கறிகள் விலை!
பிக் பாஸ் சீசன் 8 : அடுத்த ரவீந்தர் ஆகும் முத்துக்குமரன்?