தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 22) தொடங்கி வைத்தார். தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.
கட்டிட அனுமதிக்காக அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க கட்டிட விதிகளை எளிமைப்படுத்தும் வகையிலும் ஒரு புதுமையான முயற்சியாகவே சுயசான்றிதழ் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறையின்கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சார்பில் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்கள் :
✅இத்திட்டத்தின் படி http://onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
✅ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.
✅விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை.
✅கட்டடப்பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
✅பரிசீலனைக் கட்டணம், கட்டமைப்பு, வசதிக் கட்டணங்களில் இருந்து 100% விலக்கு.
✅2,500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடியில் கட்டப்படும் வீடுகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
அதே வேளையில் இந்த திட்டத்தை முறைக்கேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி.
🔻கட்டிட வரைபட அனுமதி அளிக்கப்படும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.
🔻கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
🔻விண்ணப்பத்தில் காட்டப்பட்ட கட்டிட வடிவமைப்பு, அடித்தளம், பயன்படுத்தப்படும் மரம், கான்கிரீட், கம்பி, கழிவுநீர்த்தொட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தண்ணீர் தொட்டி ஆகியவை உரிய விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். தெருக்களில் கட்டுமானப்பொருட்கள், கழிவுகளை கொட்டக்கூடாது.
🔻இந்த அனுமதி உத்தரவு, விண்ணப்பதாரர்தான் நிலத்தின் உரிமையாளர் என்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தாது. அதை ஆவணமாக பயன்படுத்த இயலாது.
🔻சம்பந்தப்பட்ட நிலம், விவசாய நிலமாக, நிறுவனத்துக்கு சொந்தமானதாக, திறந்தவெளிப் பகுதியாக, கேளிக்கை பயன்பாட்டுப் பகுதியாக அல்லது சாலைக்கு ஒதுக்கப்பட்டதாக இருந்தால், அனுமதி உத்தரவு தானாக ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
🔻ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படிதான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.
🔻கட்டிடம் கட்டும்போது விதிமீறல் கண்டறியப்பட்டால், உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
🔻விண்ணப்பதாரரின் சுய சான்றிட்ட ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, அதில் ஏதாவது தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு உரிய தண்டனை விதிக்கப்படும்.
இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் புதிய திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Share Market : பட்ஜெட் தாக்கல் பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்குமா?
பட்ஜெட் தாக்கல் : மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்