நாடு முழுவதும் தக்காளி விலை சராசரியாக கிலோ ரூ.120-ஐ கடந்தே பல நாட்களாக விற்பனையாகிவரும் நிலையில் விரைவில் வெங்காயத்தின் விலையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது தமிழ்நாட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.30 ஆகவும் சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120 ஆகவும் விற்பனையாகிவரும் நிலையில்,
வெங்காய விலை நிலவரம் குறித்து ‘கிரிஸில்’ சந்தை ஆய்வு நிறுவனம் (Crisil Market Intelligence and Analytics) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “வரும் ஆகஸ்ட் இறுதியில் இருந்து வெங்காய விலை படிப்படியாக உயரும். செப்டம்பர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படலாம்.
இருப்பினும் கடந்த 2020-ல் ஏற்பட்ட வெங்காய விலை உயர்வுபோல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
வரத்து – தேவை ஏற்றத்தாழ்வால் இந்த விலையேற்றம் ஏற்படும். சில்லறைச் சந்தையில் இது அடுத்த (செப்டம்பர்) மாதம் முதல் வாரத்தில் இருந்து எதிரொலிக்கத் தொடங்கும்.
ராபி பருவத்தில் அறுவடையாகும் வெங்காயங்களின் ஆயுட்காலம் சற்று குறைவுதான். ஒன்று முதல் இரண்டு மாதங்களில் அவை அழுகிவிடும்.
அதுதவிர பிப்ரவரி – மார்ச் காலகட்டத்தில் வெங்காயத்தை பதற்றத்தில் வாங்கிக் குவித்தோர் அதிகம். வெளிச்சந்தையில் வெங்காய இருப்பு குறையத் தொடங்கிவிட்டது.
ஆகஸ்ட் இறுதியில் கையிருப்பு வெகுவாகக் குறையும். இதனால் தட்டுப்பாடு காலம் 15 முதல் 20 நாட்கள் நீடிக்கும். இதன் விளைவாக வெங்காய விலை ஏறும்.
காரிஃப் பருவ வெங்காயம் அறுவடை அக்டோபரில் தொடங்கும். அதன்பின்னர் காரிஃப் வெங்காயம் சந்தைக்கு வருவது அதிகரித்தால் வெங்காய விலை கட்டுப்பாட்டுக்கு வரும்.
அக்டோபர் – டிசம்பர் விழாக்காலத்தில் வெங்காய விலை நிலைத்தன்மை அடையும். இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையில் வெங்காய விலை குறைந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தது.
பருப்பு, தானியங்கள், காய்கறி விலை ஏறியது. இந்தச் சூழலில் காரிஃப் பருவத்தில் வெங்காயம் விதைக்கும் விவசாயிகள் மத்தியில் விலைவாசி உயர்வு தயக்கத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக வெங்காயம் விதைத்தல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வெங்காய விளைச்சலும் கடந்த ஆண்டைவிட 5 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டில் ஒட்டுமொத்த வெங்காய உற்பத்தி 29 மில்லியன் மெட்ரிக் டன் என்று கணக்கிடப்படுகிறது. இது கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தைக் கணக்கில் கொள்ளும்போது 7 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு வெங்காய வரத்தில் பெரிய அளவு தட்டுப்பாடு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆகஸ்ட், செப்டம்பர் மழை நிலவரம் பொறுத்தே வெங்காயம் விளைச்சல் இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: அடிக்கடி 750 மில்லி ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!