கோவையில் 10 மாதத்தில் 1 லட்சம் வாகனங்கள் பதிவு… சாலைகள் அலறல்!

Published On:

| By Minnambalam Login1

கோவையில் கடந்த பத்து மாதங்களில், பதிவான வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

கோவையில் 8 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இங்கு தினமும் புதியதாக வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு, 75 வாகனங்களே வரையே பதிவாகும். ஆனால் தற்போது பதிவாகும் வாகனங்களின் எண்ணிக்கை, நுாற்றை கடந்து இருக்கிறது. சுபமுகூர்த்த தினங்களில் நாள் ஒன்றுக்கு 180 வாகனங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன.

மார்க்கெட்டில் புதிது, புதிதாக ஏராளமான வாகனங்கள் அறிமுகமாகின்றன. அதோடு, பல சலுகைகளும் வழங்கப்படுவதால் அதிக அளவு வாகனங்கள் விற்பனையாக தொடங்கியுள்ளது. பெரும்பாலானோர் ஒரு வாகனத்தை அதிக பட்சம், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அல்லது 50,000 கிலோ மீட்டருக்கு மேல் பயன்படுத்த விரும்புவதில்லை. பழைய காரை விற்று விட்டோ அல்லது எக்சேஞ்ச் ஆஃபரிலோ கொடுத்து புதிய வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது, ஐ.டி நிறுவனங்களும் ஏராளமாக கோவையில் குவிந்து வருகின்றன. இதனால், இளைஞர்கள், இளம் பெண்களின் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கோவையில் மட்டும் 1,19,510 வாகனங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகமாகும். தற்போது கோவை மாவட்டத்தில் 33 லட்சத்து 99 ஆயிரத்து 292 வாகனங்கள் உள்ளன.

பொது போக்குவரத்து என்று எடுத்து கொண்டால் கோவையில் பேருந்து சேவை மட்டும்தான் உள்ளது. இதனால், பண வசதி படைத்தவர்கள் பொது போக்குரவத்தை பயன்படுத்த முன்வருவதில்லை. இதனால், மெட்ரோ ரயில் வசதி விரைவில் கொண்டு வந்தால் மட்டுமே கோவை மாநகரில் வருங்காலத்திலாவது கார்களை வாங்கும் எண்ணம் குறையலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்…கிரிக்கெட்டுக்கு முழுக்கு… யார் இந்த ஆர்யமான்?

எதிர்க்கட்சித் தலைவரின் உரிமை மறுக்கப்படுகிறது : ராகுல் காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment