புதுக்கோட்டை மாவட்டம் கோகர்ணேசுவரர் கோயிலின் தேர் கவிழ்ந்த விபத்தில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் இன்று (ஆகஸ்ட் 7) உயிரிழந்தார்.
புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் பிரகதாம்பாள் கோகர்ணேசுவரர் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் கடந்த ஜூலை 31 அன்று நடைபெற்றது. தேரோட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த நான்கு தேர்களை பக்தர்கள் ஆர்வத்துடன் இழுக்க தொடங்கினர்.
தேர் கவிழ்ந்து விபத்து
தேரோட்டம் தொடங்கிய சில வினாடிகளிலேயே நான்கு தேர்களில் மூன்றாவதாக அலங்கரிக்கப்பட்டிருந்த தேர் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. “கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்ததால் தேர்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. வெள்ளோட்டம் எதுவும் நடைபெறாமல் தேர் இயக்கப்பட்டதாலும், அடிதளத்தில் கிளாம்புகள் சரியாக இல்லாததாலும் இந்த விபத்து ஏற்பட்டது” என தெரிவித்தனர் மக்கள்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தேர் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 9 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 9 பேரில் மூதாட்டி ராஜகுமாரி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தில் இதுபோன்ற தேர் விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. தேரோட்டத்திற்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் சரியாக இருக்கிறதா என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணித்தால் விபத்துகளை தடுக்க இயலும்.
மோனிஷா