omni buses operated from koyambedu

கிளாம்பாக்கம்தான்… ஆர்டர் போடும் அரசு: கோயம்பேடுதான் -அடம்பிடிக்கும் ஆம்னி… அவதியில் மக்கள்!

தமிழகம்

பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். omni buses operated from koyambedu

சென்னைக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. தற்போது அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் இந்த மாத இறுதிக்குள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குப் பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (ஜனவரி 23) தெரிவித்திருந்தார்.

ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு அரசு கொடுத்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து இன்று நள்ளிரவு முதல் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களே ஒப்பு கொண்டார்கள். ஆனால் தற்போது அதற்கு மாறாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவதற்கு தயாராக இல்லை என்று சொல்கிறார்கள்.

அரசு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது. மக்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் தான் அரசு செயல்படும். எனவே இன்றிலிருந்து ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயங்குவதற்கு முழுமையாக தடை விதிக்கப்படும். ஆம்னி பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்படும்.

ஆம்னி பேருந்துகளுக்கும் பயணிகளுக்கும் தேவையான வசதிகளை முழுமையாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் போக்குவரத்து துறையும் செய்து கொடுத்துள்ளது. எனவே ஏற்கனவே ஒப்புக் கொண்டது போல் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் சங்கங்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஆனால் கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ”ஆம்னி பேருந்துகளில் பயணிப்பதற்காக 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளார்கள். இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளார்கள். எனவே கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க முடியாது.

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் தான் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று எங்களுக்கு தகவல் அளித்தனர்.

எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு முடிவு எடுத்துள்ளது. பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கினால், செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தான் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் எந்த இடத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்தார்களோ அந்த இடத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க கூடாது என்று அரசு தடை விதித்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் மறுப்பு தெரிவிப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

 “எனக்கு இந்தி தெரியாது… ஐபிசி என்றுதான் சொல்லுவேன்” : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

ஆளுநர் தேநீர் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு!

omni buses operated from koyambedu

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *