அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்து ஆயுத பூஜை உட்பட அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் வேலை நிமித்தமாகச் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம்.
இந்த சூழலைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை உயர்த்தி விடுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதற்கு ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தி வசூலிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்தார்.
அத்துடன் அதிக கட்டணம் வசூலித்த பேருந்து நிர்வாகத்திடமிருந்து கூடுதல் கட்டணத்தை வாங்கி பயணிகளிடமே அதிகாரிகள் திருப்பி கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கும் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை உயர்த்தின. இதனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தற்போது தீபாவளி பண்டிகை அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால் அரசு விரைவு பேருந்துகளில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
ஆனாலும் ஆம்னி பேருந்துகள் தங்களது கட்டண உயர்வைக் குறைத்துக் கொள்ளவில்லை. வரும் அக்டோபர் 4 ஆம் தேதி சரஸ்வதி பூஜை என்பதால் டிக்கெட் விலையை மீண்டும் ஆம்னி பேருந்துகள் அதிகரித்துள்ளது.
அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதி வார இறுதி நாட்கள் என்பதால் செப்டம்பர் 30 ஆம் தேதியிலிருந்தே டிக்கெட் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில் ஆம்னி கட்டணங்கள்
- சென்னை-சேலம்: 400 ரூபாயிலிருந்து தொடக்கம்,
- சென்னை-கோவை: 450 ரூபாயிலிருந்து தொடக்கம்,
- சென்னை-நெல்லை: 550 ரூபாயிலிருந்து தொடக்கம்,
- சென்னை-மதுரை: 330 ரூபாயிலிருந்து தொடக்கம்,
- சென்னை-திருச்சிராப்பள்ளி: 330 ரூபாயிலிருந்து தொடக்கம்
செப்டம்பர் 30 ஆம்னி பேருந்து கட்டணங்கள்
- சென்னை-சேலம்: 800 ரூபாயிலிருந்து தொடக்கம்,
- சென்னை-கோவை: 1000 ரூபாயிலிருந்து தொடக்கம்,
- சென்னை-நெல்லை: 1,200 ரூபாயிலிருந்து தொடக்கம்,
- சென்னை-மதுரை: 900 ரூபாயிலிருந்து தொடக்கம்,
- சென்னை-திருச்சிராப்பள்ளி: 750 ரூபாயிலிருந்து தொடக்கம்.
அதன்படி பார்த்தால் இரு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் ரூ.3000, ரூ.4,000 என உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த பிரச்சினைக்கு முடிவே கிடையாதா என புலம்பி வருகின்றனர் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள்.
மோனிஷா
திபாவளி சிறப்புப் பேருந்துகள்: முன்பதிவு எப்போது?
ராகுல் நடை பயணத்தால் நிச்சயம் மாற்றம் வரும் : அன்புமணி