கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள்…: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை இன்னும் சில வாரங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க அனுமதிக்க முடியுமா என தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து ஒய்பிஎம் டிராவல்ஸ், வெற்றி ட்ராவல்ஸ் உள்ளிட்ட ஆம்னி பேருந்துகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு இன்று (ஜனவரி 31)_ நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆம்னி பேருந்துகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயண் ஆஜராகி, ‘கிளாம்பாக்கம் தாண்டி நகர எல்லைக்குள் தனியார் பேருந்துகள் நுழைவதற்குப் போக்குவரத்து ஆணையர் தடை விதித்துள்ளார்.
இந்த தடை என்பது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கும் பயணிகளை ஏற்றி இறக்கும், கடந்த 20 ஆண்டு நடைமுறைகளுக்கு எதிராக உள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போது இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அப்போது தொடரப்பட்ட வழக்கில் கட்டுப்பாடுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
போக்குவரத்து ஆணையரின் தடையால் பயணிகள், ஆம்னி பேருந்து நிறுவனங்கள் அசௌகரியத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இந்த விசாரித்த நீதிபதி மஞ்சுளா, “தென் மாவட்டங்களில் இருந்து வரும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்ற போக்குவரத்து ஆணையரின் உத்தரவை சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கலாமே?. மேலும் சில வாரங்களுக்கு கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க முடியுமா? என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதற்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை. பிப்ரவரி 1ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
’சிஏஏ சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது’ : எடப்பாடி
“ஒரு சீட் கூட கிடையாது” : காங்கிரசுக்கு நிபந்தனை விதிக்கும் மம்தா