மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் திறக்கப்பட்டதை அடுத்து, இனி அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டும் என்றும் கடந்த மாதம் அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான போதிய வசதிகள் செய்து கொடுக்கும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 7 ஆம் தேதி நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு வந்தபோது, அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஆம்னி பேருந்துகளுக்கு தாம்பரம், போரூர் மற்றும் சூரப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பயணிகளை இறக்கி ஏற்றவும், பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விடவும் மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும்,
கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 10) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஆர்.என். மஞ்சுளா அளித்த தீர்ப்பு பின்வருமாறு, “மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை பயன்படுத்தலாம்.
கோயம்பேடு பேருந்து முனையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதால் அந்த நடைமுறை தொடரும்.
மேலும் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம். அதேசமயம் ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது.
ஆனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் கண்டிப்பாக பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்” என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை அடுத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களும், பயணிகளும் சமூகவலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எலக்ஷன் ஃப்ளாஷ் : காங்கிரஸ் கோட்டாவில் கமல்… பஞ்சாப் ஆளுநர் ஆகிறாரா பொன்னார்?
சொல்பேச்சு கேட்காத இளம்வீரர்… இழுத்து மூடப்பட்ட கதவுகள்… என்ன தான்பா பிரச்சினை?