ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதிக கட்டணம் வசூலித்ததாக 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (அக்டோபர் 24) மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது என்று தென்மாநில ஆம்னி பேருந்துகள் சங்கம் நேற்று அறிவித்தது.
ஆனால் வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் இன்று அறிக்கை வெளியிட்டது.
இதனிடையே ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள மக்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்புவதற்காக முன்பதிவு செய்திருந்த நிலையில், இருவேறு ஆம்னி பேருந்து சங்கங்களின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவித்த தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்புடன் பேசியிருக்கிறோம். தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை தொடரும். தவறு இல்லை என்றால் மேலதிகாரிகளிடம் முறையீடு செய்தால் நிச்சயாக பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளோம். எனவே தங்களது அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என்று கேட்டுள்ளோம்.
ஒருவேளை வேலை நிறுத்தம் தொடர்ந்தால் நாளை கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயுத பூஜை போன்ற விடுமுறை தினங்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு எங்கும் மக்கள் தேங்காமல் தொடர்ந்து போக்குவரத்து சரியான முறையில் இயக்கப்படுகிறது.
அதே போன்று இன்று மாலை தேவைப்படுமானால் இன்னும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டு பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னதாகவே ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுடன் பேசி ஒரு முடிவு கொண்டு வரப்பட்டது. அதன்படி தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது கூடுதல் கட்டணம் வசூல் இல்லாமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது.
ஆனால் கடந்த 2 மாதங்களில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மீண்டும் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. எனவே தான் தீபாவளியின் போது மீண்டும் இது போன்ற பிரச்சனை ஏற்பட கூடாது என்று பேருந்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே போல வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கக்கூடாது என்று ஏற்கனவே போக்குவரத்துத் துறை ஆணையர் கூட்டம் நடத்தி எச்சரித்திருக்கிறார். இதனை தொடர்ந்து இயக்கப்படும் வெளிமாநில பதிவு கொண்ட பேருந்துகள் மீது தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 120 பேருந்துகள் பறிமுதல் செய்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த பேருந்துகள் வெளிமாநில பதிவு எண்களை மாற்றி கொள்ள வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு.
வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தென்மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் எந்த பிரச்சனை இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுத்து பிரச்சனை இல்லாத பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
ஓய்வு பெற்ற ஒரே நாளில்…. ஒடிசாவில் அமைச்சர் அந்தஸ்து பெற்ற தமிழக ஐஏஎஸ்!
தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய நிலவரம்!