அமைச்சர் எச்சரிக்கைக்குப் பின்னும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்!

தமிழகம்

விடுமுறை நாட்களைக் கருத்தில்கொண்டு, மீண்டும் கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்துகள் இறங்கியுள்ளன. வெளியூரிலிருந்து சென்னைக்கு வர அதிகபட்சமாக 4,500 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையாக தொடர்ந்து மூன்று நாட்கள் (ஆகஸ்ட் 13 – 15) விடுமுறை வந்ததையொட்டி, சென்னை மற்றும் பிற மாநகர்களில் தங்கியிருந்த வெளியூர் மக்கள், தங்கள் ஊருக்குச் செல்வதற்காக ஆகஸ்ட் 12ம் தேதி பயணம் மேற்கொண்டனர்.

அதற்காக அவர்கள், ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் செய்தனர். அது, வழக்கத்தைவிட 3 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தமிழகப் போக்குவரத்துத் துறைக்கு புகார் அளித்தனர்.

அதுதொடர்பாக ஆகஸ்ட் 12ம் தேதி பேட்டியளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “இதுகுறித்து குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கட்டணக் கொள்ளை நடைபெற்றிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, போக்குவரத்து இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு சென்னையில் பல இடங்களில் ஆய்வு நடத்தினர்.

இதில் ஒரு சில பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை நடத்துநரிடம் பெற்று மீண்டும் அதே பயணிகளிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், “ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் குறித்து மக்கள் தங்களது எல்லைக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம்” என்றும் தெரிவித்திருந்தனர்.

மீண்டும் கட்டண கொள்ளை!
இந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வகையில் இன்று (ஆகஸ்ட் 15) சென்னைக்குப் புறப்படத் தயாராயினர். இதற்காக அவர்கள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் செய்தனர்.

ஆனால், மீண்டும் ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டனர். குறிப்பாக நெல்லையிலிருந்து சென்னைக்கு வர 4,400 ரூபாயும், மதுரையிலிருந்து சென்னைக்கு வர 4,000 ரூபாயும், சேலத்திலிருந்து சென்னைக்கு வர 2,500 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் மணிக்கு தகுந்தபடி கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் அதிர்ச்சியளிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் இரவு 10 மணிக்கு மேல் என்றால் 4,400 ரூபாயும், இரவு 8 மணிக்கு என்றால் 3,500 ரூபாயும், குறைந்தபட்சமாக 2,500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், சாதாரண நாட்களில் அதிகபட்சமே வெறும் 1,000 ரூபாயாக இருக்கும் இந்தக் கட்டணம், விடுமுறை நாட்களில் மட்டும் 3 மடங்காக உயர்ந்திருக்கிறது.

அதிலும் குறிப்பிட்ட சில பேருந்துகளில்தான் இந்த அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டதைத் தெரிந்துகொண்டே இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், உடனடியாக பொதுமக்கள் சென்னை திரும்ப முடியாமல் அவஸ்தையில் உள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

விடுமுறை முடிவு: 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *