ஆம்னி பேருந்து கட்டணம்: அரசே நிர்ணயிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகம்

”ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பண்டிகைக் காலங்களின்போது தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படுவது, மக்கள் எதிர்கொள்ளும் வழக்கமான பிரச்சினையாகவே மாறிவிட்டது. கடந்த ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளின்போது ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, தமிழக போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து கட்டணத் தொகை போக மீதிப் பணத்தை பயணிகளிடம் வழங்கியது. இதுகுறித்து நம்முடைய மின்னம்பலத்தில் பல செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதோ மீண்டும் அதே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது.

நாளை (டிசம்பர் 25) கொண்டாடப்பட இருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதுவும் வார விடுமுறை வேறு உள்ளது. இதைப் பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் மீண்டும் கட்டணக் கொள்ளையில் இறங்கியுள்ளன.

omni bus fare ramadoss request

அந்தவகையில், கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துக்கு வழக்கமாக ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,300 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. அதேபோல் குளிர்சாதன வசதி உடைய செமி சிலீப்பருக்கு ஒரு சில பேருந்துகளில் ரூ.3,500, ரூ.4000ம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், தூத்துக்குடிக்கு குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு குளிர்சாதன சிலீப்பர் பேருந்துக்கு ரூ.1,700 முதல் ரூ.3000 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சில பேருந்துகளில் ரூ.2,400, ரூ.2,700, ரூ.2,800 என பல்வேறு விதமான கட்டணம் பெறப்படுகிறது.

இதேபோல் இன்றும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர், இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னை – மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

omni bus fare ramadoss request

பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டன. கட்டணக் கொள்ளை குறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்துத் துறை கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல்.

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு மாறாக ஆம்னி பேருந்து சங்கங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள போக்குவரத்துத் துறை அனுமதிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக் கூடாது. ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். அதற்காக சட்டப்பூர்வ ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்” இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

சபரிமலை தரிசனம்: 50 அடி பள்ளத்தில் விழுந்து 8 பக்தர்கள் பலி

அதிமுகவில் இடமில்லை: 3 பேருக்கு மெசேஜ் சொன்ன ஜெயக்குமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *