இந்திய முட்டைகளுக்கு கத்தார், ஓமன் தடை: நாமக்கல்லை தாக்கும் துருக்கி

Published On:

| By Minnambalam Login1

கத்தாரை தொடர்ந்து மற்றொரு வளைகுடா நாடான ஓமனும் இந்திய முட்டைகளுக்கு தடை விதித்திருப்பதால், நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் கத்தார் நாடு இந்திய முட்டைகளுக்கு தடை விதித்தது. அதை தொடர்ந்து , ஓமன் நாடும் இந்திய முட்டைகளுக்கு தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முட்டை வகைகளில் ஏஏ வகை 70 கிராம் எடை கொண்டதாக பார்க்கப்படுகிறது. 60 கிராம் எடை கொண்ட முட்டை ஏ ரகமாக கருதப்படுகிறது. 50 கிராம் எடை கொண்ட முட்டைகள் பி ரகமாகவும் அதற்கும் கீழ் எடை கொண்டவை சி ரகமாகவும் கருதப்படுகிறது.

நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் 50 கிராம் எடை கொண்டவை. அதாவது, பி ரகத்தை சேர்ந்தவை. கத்தார் நாடு ஏஏ மற்றும் ஏ ரக முட்டைகளை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

இதனால், கத்தார் நாட்டுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு கோடி முட்டைகள் நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது 15 கோடி முட்டைகள் தேக்கமடைந்து கிடப்பதாக கூறப்படுகிறது .

கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவிடம் இருந்து கத்தார் முட்டை வாங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய முட்டை ஏற்றுமதி சந்தையில் நாமக்கல்தான் 95 சதவிகிதத்தை பூர்த்தி செய்கிறது. இதனால், நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மற்றும் கொச்சியில் இருந்து கத்தார் நாட்டுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இந்திய முட்டைகளின் திக்கான மஞ்சள் நிற கருவுக்காவும் விரைவாக டெலிவரி செய்யப்படுவதாலும் கத்தார் நம்மிடம் இருந்து முட்டைகளை வாங்கி வந்தது.

தற்போது, துருக்கியில் இருந்து முட்டைகளை வாங்க கத்தார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. 360 முட்டைகள் அடங்கிய ஒரு பெட்டியை 28 டாலர்களுக்கு நாம் வழங்கும் போது, துருக்கி 33 டாலர்களுக்கு வழங்குகிறது.

எனினும், கத்தார் நாட்டின் தரக்கட்டுப்பாட்டை துருக்கி முட்டைகள் நிறைவு செய்வதால், அந்த நாட்டு முட்டைகளை இறக்குமதி செய்ய கத்தார் முடிவெடுத்துள்ளது.

கத்தாரை தொடர்ந்து, இந்திய முட்டைகளுக்கு ஓமனும் நேற்று முதல் தடை விதித்திருப்பதால் நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எனவே, நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் எடையை 50 முதல் 60 கிராமுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது இதற்காக, உலகளவில் கடைபிடிக்கும் உணவு தர நடைமுறைகளை நாமக்கல் கோழி முட்டை உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இந்தியாவில் ஆந்திரா 17. 85 சதவிகித முட்டை உற்பத்தியுடன் நாட்டில் முதலிடத்தில் உள்ளது. அதே வேளையில் இந்தியாவின் egg city என்று நாமக்கல் நகரைதான் குறிப்பிடுவார்கள். இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 1,500 கோழி பண்ணைகள் வழியாக சரசரியாக 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர, இலங்கை, குவைத், யு.ஏ.ஈ. , மலேசியா, ரஷ்யா போன்ற பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஓமன் , கத்தார் நாடுகள் இந்திய முட்டைகளுக்கு தடை விதித்தது தொடர்பாக திமுக எம்.பி கே.ஆர்.என். ராஜேஷ் குமார் , ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார். அப்போது, மத்திய அரசு கத்தார் மற்றும் ஓமன் நாட்டு தூதர்களுடன் பேசி தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

பாஷா மரணம்: தேர்தல் முடிவுகளை மாற்றிய கோவை குண்டுவெடிப்பு!

”அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான்” : அமித் ஷாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி அறிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share