1000-ஐ கடந்த பங்குனி ஆமைகள் உயிரிழப்பு… அரசு போட்ட முக்கிய உத்தரவு!

Published On:

| By Selvam

பங்குனி ஆமைகளின் உயிரிழப்பு 1000-ஐ கடந்த நிலையில், சென்னை கடற்கரைப் பகுதிகளில் சட்டவிரோதமான இழுவை மீன்பிடி படகுகளைத் தடுக்க மீன்வளத்துறை, வனத்துறை நடவடிக்கைகளை மேற்கோண்டு வருகிறது.

பங்குனி ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை இந்தியாவின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் முட்டையிடுவதற்காக வருகின்றன.

இந்தநிலையில், இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் 1,000 பங்குனி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் வலைகளில் சிக்கி பங்குனி ஆமைகள் உயிரிழந்துள்ளதாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பங்குனி ஆமைகள் இறப்பை தடுக்க வனத்துறை, மீன்வளத்துறை, கடலோர காவல்படை நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், தடைசெய்யப்பட்ட 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்த 24 இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சென்னை வனவிலங்கு காப்பாளர் மணிஷ் மீனா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்,

“காசிமேடு முதல் திருவான்மியூர் கடற்கரை வரை மீன்வளத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ரோந்துப் பணியைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி மீன்பிடித்த 24 இழுவைப் படகுகள் கண்டறியப்பட்டு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை இணை இயக்குநர் இந்த விஷயத்தில் தீர்ப்பு வழங்கும் வரை, இழுவைப் படகுகள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாது. இந்த படகுகள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல குறைந்தது ஒரு மாதமாகும். இந்த குற்றத்தை அவர்கள் மறுபடியும் மேற்கொண்டால், எரிபொருள் மானியம் குறைக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“சென்னையை ஒட்டிய கிழக்குக் கடற்கரையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பங்குனி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. இத்துயரத்தைக் காண நேரில் சென்றிருந்தோம். நேற்று காலை அக்கரை கடற்கரையை ஒட்டிய 2 கி.மீ. நீளத்தில் மட்டும் 18 ஆமைகள் இறந்திருந்தன.

இந்த ஜனவரி தொடங்கி மொத்த கடற்கரையிலும் 900க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. ஆமைகளை உடற்கூராய்வுக்கு உட்படுத்தியதில் மீன்பிடிக்கப் பயன்படுத்தும் வலைகளில் மாட்டி மூச்சுவிட முடியாமலே பெரும்பாலான ஆமைகள் உயிரிழந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

அனுமதிக்கப்படாத கடற்பகுதிகளில் பயன்படுத்தக் கூடாத வலைகளை உபயோகித்த மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

அடுத்த 2 மாத காலம் பங்குனி ஆமைகள் அதிகளவில் முட்டையிட வரக்கூடும் என்பதால் தமிழ்நாடு மீன்வளத்துறை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share