இந்தி திணிப்பு: தீக்குளித்து முதியவர் உயிரிழப்பு!

Published On:

| By Kalai

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து  85 வயதான திமுக தொண்டர் தீக்குளித்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பி.என். பட்டி  பேரூராட்சி தாழையூரைச் சேர்ந்தவர் தங்கவேலு (85).

இவர் நங்கவள்ளி ஒன்றிய திமுக முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் ஆவார். திமுக மீது தீவிர பற்று கொண்டவர்.

இன்று(நவம்பர் 26) காலை மேட்டூர் அருகே உள்ள  தாழையூர் திமுக அலுவலகம் முன்பு ஒரு வெள்ளைத் தாளில்

 ” குடியரசு தலைவர் அவர்களே இந்தியை திணிக்க தயவுசெய்து அனுமதி வழங்காதீர்கள், மோடி அரசே ,  மத்திய அரசே இந்தியை திணிக்காதே,

இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க  , இந்தி கோணமான எழுத்து , கோமாளி எழுத்து , மாணவ மாணவிகள் வாயில் நுழையாது.  வேலை வாய்ப்பை பாதிக்கும் இந்தி ஒழிக ,  தமிழ் வாழ்க”

இப்படிக்கு  எம்.வி.தங்கவேலு,  தாழையூர் பி.என். பட்டி என்று எழுதி வைத்துவிட்டு தன் மீது பெட்ரோல் ஊற்றி தானே தீ வைத்துக் கொண்டார்.  

தீப்பற்றி எரிந்த போதும் இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று கோஷமிட்டுள்ளார். பின்னர்  சற்று நேரத்தில் எரிந்து கரிக்கட்டையாக கீழே சாய்ந்தார்.

தகவல் அறிந்த கருமலை கூடல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த செய்தி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“சேலம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

தீக்குளித்து இறந்த தங்கவேல் உடலுக்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் , சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி , 

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும்  சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

கலை.ரா

காந்தாரா பாடல் தடை நீக்கம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

மும்பை தாக்குதல்: உயிர் பிழைத்தவர் உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel