மழை நீரில் எண்ணெய் கழிவு: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி!
மழைநீரில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய ஏன் நிபுணர் குழுவை அமைக்கவில்லை என்று தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இன்று (டிசம்பர் 9) கேள்வி எழுப்பியுள்ளது.
மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால் எண்ணூரில் மழை நீர் வடிந்தவுடன் வீடுகளுக்கு திரும்பிய மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் வெள்ள நீரோடு எண்ணெய் கழிவும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இந்த எண்ணெய் கழிவால் மூச்சுவிடுவதற்கு கூட சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் குப்பையை எரித்தால் கூட இந்த பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்துவிடும் என்றும் இதனால் வீட்டில் இருப்பதற்கே பயமாக இருக்கிறது என்றும் வேதனை தெரிவித்தனர்.
இந்த எண்ணெய் கழிவானது கொசஸ்தலை ஆறு வழியாக கடலில் கலப்பதால் மீனவர்களும் அச்சமடைந்துள்ளனர். கடலில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம், “எண்ணெய் கழிவை வேண்டுமென்றே திறந்துவிட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. எண்ணெய் தடயங்களை (traces of oil) தான் பார்க்க முடிகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, “சாலைகள், குடியிருப்பு பகுதிகள் முழுவதும் எண்ணெய் கழிவுகளை காண முடிகிறது. எண்ணெய் தடயங்கள் என்று குறிப்பிட்டால் ஒரு இடத்தில் மட்டும் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலை அப்படி இல்லையே.
மேலும், நீர்வளத்துறை அறிக்கை 5 கிலோ மீட்டருக்கு எண்ணெய் கழிவுகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கிறது. 5 கிமீ பரவியுள்ள எண்ணெய் கழிவை எப்படி எண்ணெய் தடயங்கள் என்று கூற முடியும்” என்று பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
அப்போது, “மழைவெள்ளத்தில் எண்ணெய் கலப்பதைத் தடுக்கவும், தேங்கியிருந்த எண்ணெய் கழிவுகளை சேகரிக்கவும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டிருந்தால் உடனடியாக தெரியவந்திருக்கும். அப்படி எதுவும் நடக்கவில்லை. அரசு மேற்கொள்ளும் ஆய்வுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒத்துழைக்கும்” என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து பசுமைத் தீர்ப்பாயம், “இதில் உண்மை நிலையை அறிய தமிழ் நாடு அரசு ஏன் இன்னும் நிபுணர் குழுவை அமைக்கவில்லை?
மாவட்ட ஆட்சியரும், வருவாய் நிர்வாகமும் என்ன செய்கின்றன” என்று கேள்வி எழுப்பியது.
மேலும், ”5 கி.மீ தூரத்திற்கு எண்ணெய் கழிவு கலந்த பிறகுதான் எண்ணெய் நிறுவனங்களுக்கு இந்த தகவல் தெரிந்தது என்றால் நிறுவனங்கள் எடுத்த பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் என்ன?” என்று தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், “எண்ணெய் கழிவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இது குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட தீர்ப்பாயம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் சென்னை மண்டலம், தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குநர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய குழு அமைத்து டிசம்பர் 11 ஆம் தேதி ஆய்வு செய்து, 12 ஆம் தேதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும். மேலும், மாசுக்கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்டு வரும் ஆய்வின் அறிக்கையையும் டிசம்பர் 12 ஆம் தேதியே தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களில் கனமழை!
அட்லியின் ’ஜவான்’ படத்திற்கு கிடைத்த ஹாலிவுட் கௌரவம்!