நாகை மாவட்டத்தில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடலில் கலந்த விவகாரம் குறித்து வரும் மார்ச் 16-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள் மற்றும் கப்பல்கள் மூலமாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
கப்பல்களுக்கு எண்ணெய் கொண்டு செல்லும் வகையில் நாகப்பட்டினம் நகரம், நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தின் கடற்கரை வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பட்டினச்சேரி மீனவ கிராமம் வழியாகச் செல்லும் குழாயில் கடந்த மார்ச் 2ஆம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கடலில் கலந்தது.
“இதனால், அதிலிருந்து வெளியேறும் வாயு மற்றும் துர்நாற்றம் காரணமாக கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன” என்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் எண்ணெய் குழாய் உடைப்பு சம்பவத்தைக் கண்டித்து பட்டினச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இங்குள்ள குழாய்களை அகற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும், சென்னை பெட்ரோலிய கழகத்தின் குழாய்கள் இப்பகுதியில் இருக்கக்கூடாது என்றும், அதை நிரந்தரமாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் பட்டினச்சேரி பகுதியில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடலில் கச்சா எண்ணெய் கலந்த பகுதிகளில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று (மார்ச் 12) ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடந்த மார்ச் 10-ஆம் தேதியன்று சிபிசிஎல் நிர்வாகம், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
அப்போது, குழாயில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவானது. அது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர், மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், வருவாய்த்துறை மற்றும் மீன்வளத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் காவல் துறை உட்பட அனைத்து துறைகளின் அதிகாரிகளோடு, இந்தப் பகுதியைச் சேர்ந்த தாலுகா மீனவர்கள் மற்றும் சிபிசிஎல் நிறுவனத்துடன் சேர்ந்து வரும் மார்ச் 16ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படும் வரை, சிபிசிஎல் நிர்வாகம் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
ராஜ்
”நெடுஞ்சாலையை ஏன் திறந்து வைத்தார்”: பிரதமரை சாடிய காங்கிரஸ்!
95வது ஆஸ்கர் : கொண்டாட்டம்… கோலாகலம்… இந்தியாவின் கனவு நிறைவேறுமா?
