மாணவி ஸ்ரீமதி இறந்த சக்தி மேல்நிலைப்பள்ளி விடுதி அரசின் அனுமதியின்றி இயங்கி உள்ளதாக குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து மக்கள் நடத்திய போராட்டம் ஒருகட்டத்தில் கலவரமாக வெடித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் கைது நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சியில் இன்று ( ஜூலை 21 ) நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மாணவி ஸ்ரீமதி இறந்த சக்தி மேல்நிலைப்பள்ளி விடுதி அரசின் அனுமதி இன்றி இயங்கி உள்ளது. முறையாக விதிகள் கடைபிடித்திருந்தால் மாணவியின் உயிருக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.
- க.சீனிவாசன்