தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான ஏப்ரல் 21 ஆம் தேதி, தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினர்.
மேலும் 12 மணி நேர வேலை சட்ட மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் மே தினத்தன்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார்.
மேலும், இது குறித்த தகவல் பேரவை செயலகத்திற்கு உரிய துறையின் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சட்ட முன்வடிவு திரும்பப் பெறப்பட்டது குறித்த செய்தி பேரவை உறுப்பினர்களுக்கு செய்திக் குறிப்பு மூலம் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
அதன்படி விரைவில் 12 மணி நேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து மே 3 (நேற்று) சட்டமன்ற பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 8/2023) சட்டமன்றப் பேரவையில் 21-4-2023 அன்று நிறைவேற்றப்பட்டு. ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்னர்,
இச்சட்டமுன்வடிவின் மீதான செயலாக்கம் நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிலையில், இச்சட்டமுன்வடிவை அரசு திரும்பப் பெறுவதென முடிவெடுத்ததையடுத்து, அரசால் திரும்பப் பெறப்பட்டது என்று உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பெறுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
வரலாற்றில் முதல்முறை: 46 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை!
அரைமணி நேரம் என்னிடம் பேசினார்: மனோபாலா மறைவிற்கு கண்கலங்கிய சூரி