ஒடிசா அருகே நடந்த கோர விபத்தில் சிக்கிய ரயிலில் வந்த தமிழ்நாட்டு பயணி விபத்து நடந்தது பற்றிக் கூறியுள்ளார்.
ஒடிசா அருகே நடந்த கோரமண்டல் ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 207 பேர் வரைஉயிரிழந்திருப்பதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்து வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கடேசன்,
“கோரமண்டல் ரயிலில் வந்து கொண்டிருந்தேன், பாலசோர் பகுதியைக் கடந்த 15 நிமிடத்தில் டெல்லியிலிருந்து துரந்தோ எக்ஸ்பிரஸ் எதிரில் வந்தது. கோரமண்டல் ரயில் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில் சரக்கு ரயில் ஒன்று இடையில் புகுந்ததால் மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின.
500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பார்கள் என நினைக்கிறேன். நான் பி7 பெட்டியில் வந்தேன். பி6 வரை அனைத்தும் கவிழ்ந்துவிட்டன.
முன் பதிவு செய்யாத இரண்டு பொது பெட்டியிலிருந்தவர்கள் யாருமே தப்பிக்கவில்லை. எல்லோரும் இறந்து கிடக்கிறார்கள். எங்குப் பார்த்தாலும் உடல்கள் கிடக்கின்றன.
மீட்புப் பணி முழுமையாக நிறைவுபெற 2 நாட்கள் ஆகும். உடனடியாக முடியாது” என்று கூறியுள்ளார்.
பிரியா
ரயில் விபத்து : உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம்!