அறந்தாங்கி அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சவத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வீரமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இதன் அருகே உள்ள காமராஜர் நகரில் 50 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த 3 ஆம் தேதி காமராஜ் நகரைச் சேர்ந்த கந்தையா என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலை வீரமங்கலம் அருகே உள்ள வெள்ளாற்றங்கரையில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் பெரிய வீரமங்கலம் கிராமத்தில் மாற்று சமூகத்தினர் வசித்து வரும் பொது சாலையில் சவத்தை கொண்டு செல்ல கடும் எதிர்ப்பு எழுந்தது.
தகவல் அறிந்த அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார் மற்றும் அறந்தாங்கி கோட்டாட்சியர் சொர்ண ராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பட்டியல் சமுதாய மக்கள் சவத்தை எடுத்து செல்ல தனியாக பாதை உள்ளது. எங்கள் பாதையில் அனுமதிக்க மாட்டோம் என்று மாற்று சமூகத்தினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருதரப்பினரிடமும் அதிகாரிகள் 5 மணி நேரம் பேசியும் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்து அறந்தாங்கி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனைதொடர்ந்து முதியவரின் உறவினர்கள் 3 பேரை தவிர வேறு யாரும் அந்த வழியாக செல்லக்கூடாது எனக்கூறி போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சை அனுப்பி வைத்தனர்.
பின்னர் 5 மணி நேரம் கழித்து முதியவரின் உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
ஆண்டாண்டு காலமாக தங்களுக்கு இந்த நிலை தொடர்வதாக காமராஜ் நகர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசுக்கு சொந்தமான சாலையில் கூட சவ ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கிறார்கள்.
வேண்டுமென்றே பிரச்சினையை உருவாக்குகிறார்கள். மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் சாலை பழுதடைந்து இருக்கிறது. பிணத்தை ஆம்புலன்ஸில் தான் கொண்டு செல்ல வேண்டும், வெடி வெடிக்க கூடாது, மேளம் அடிக்கக் கூடாது, விசில் அடிக்க கூடாது, சாலையில் பூ போடக்கூடாது,
அமைதியான முறையில் செல்ல வேண்டும், இரண்டு நபர்களுக்கு மேல் பிணத்தின் பின்னால் மேல் செல்லக்கூடாது, மற்றவர்கள் வயல் காட்டுக்குள் நடந்து செல்ல வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.
அதற்கு சம்மதித்து சென்றால் கூட பிணத்தை சாலையில் கொண்டு செல்லும்போது பிரச்சினை செய்கிறார்கள்.
இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு இதில் கவனம் செலுத்தி இறந்தவர் உடலை பிரச்சினையின்றி கொண்டு செல்ல வழிசெய்யவேண்டும் என்று காமராஜ் நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலை.ரா
வானத்தைத் தொடப் போகிறேன்: விமான பணிப்பெண் ஆன முதல் பழங்குடியின பெண்!