கடலூர் கோதண்டராமபுரம் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்பவர் அவருடைய 13 வயது மகளை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அலர்ஜி ஏற்பட்டதாக சிகிச்சைக்காக சென்ற அவரது மகளை பரிசோதித்த டாக்டர் ஊசி எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் செவிலியர் மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டை படித்துக்கூட பார்க்காமல் நாய்க்கடி ஊசியை போட்டுள்ளார்.
ஊசி போட்ட பின்னர் தான் நாய்க்கடி ஊசி போட்டது தெரியவந்துள்ளது. இதனால் உடனே அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செய்தி வெளியான நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் கண்ணகி என்ற செவிலியரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
அரசு மருத்துவமனைக்குச் சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட விவகாரம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலர்ஜி ஏற்பட்டதால் சென்ற சிறுமிக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த ஊசியை போடாமல் நாய்க்கடி ஊசியைப் போட்டது ஏன் என்று மருத்துவமனை வட்டாரத்தில் மின்னம்பலம் சார்பாக விசாரித்தோம்.
அப்போது, கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஜூன் 27 ஆம் தேதி காலை 8 மணிக்கு அலர்ஜி ஏற்பட்டதனால் சிகிச்சைக்காக மகளை அழைத்து வந்தார் தந்தை கருணாகரன். சிறுமியை பரிசோதித்த மருத்துவர் “அவில் ஊசி” போடுவதற்கு மருந்து சீட்டு எழுதிக் கொடுத்தார்.
புறநோயாளிகள் பிரிவில் ஊசி போடும் அறைக்குள் அழைத்துச் சென்றார். அந்த அறையில் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு, நாய்க்கடி ஊசி பிரிவு, இன்சுலின் ஊசி போடும் பிரிவு என 4 பிரிவுகள் உள்ளன.
நாள் ஒன்றுக்கு அந்த புறநோயாளிகள் பிரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் ஊசி போடுவதற்காக வருவார்கள்.
இவர்கள் அனைவருக்கும் அந்த அறையில் தான் ஊசி போடப்படும் இதனால் நோயாளிகள் எங்கே ஊசி போடுவது என்று குழப்பமாகிவிடுவார்கள்.
“மேலும் புறநோயாளி பகுதியில் ஒப்பந்த செவிலியர்களை நியமிக்கக்கூடாது. ஆனால் இந்த மருத்துவமனையில் ஒப்பந்தம் முறையில் எடுக்கப்பட்ட செவிலியர்கள் மற்றும் செவிலியர் படிக்கும் மாணவிகளை ஈடுபடுத்தி வருகின்றனர்.
அப்படித்தான் ஒப்பந்த அடிப்படையில் பணிசெய்த செவிலியர் லீனா பிரன்சி ஊசி போடாமல், அருகில் இருந்த செவிலியர் பயிற்சி பள்ளி மாணவி அவில் ஊசிக்கு மாறாக (ஏஆர் வி) நாய்க்கடி ஊசி போட்டு விட்டார்.
இதை அறிந்த நிரந்தர செவிலியர் கண்ணகி மனிதாபிமான முறையில், ஏன் இந்த ஊசி போட்டிங்க என கண்டுபிடித்து சிறுமியை உள் நோயாளியாக சேர்த்து நல்ல சிகிச்சை கொடுத்து நல்ல முறையில் அனுப்பி வைத்த செவிலியரைதான் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
உடனே சிறுமியின் தந்தையிடம் மாணவர் தெரியாமல் நாய்க்கடி ஊசி போட்டுவிட்டார் என்று மன்னிப்பும் கேட்டுள்ளார்.
சிறுமிக்கு போட்ட ஊசியின் வீரியம் குறைவு என்பதால் 24 மணி நேரத்தில் (ஜூன் 28 ஆம் தேதி மாலை) டிஸ்சார்ஜ் செய்துவிட்டோம். ஆனால் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போதே அவரது குடும்பத்தினர் ஊசியை தவறாக போட்டதை சுட்டிக் காட்டி 1 லட்சம் பணம் கேட்டனர். ஆனால் சிறுமியின் உடல்நிலை சரியாகத்தான் இருக்கின்றது. தெரியாமல் தவறு நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று பணம் கொடுக்க மறுத்து விட்டோம். பணம் கேட்டு மிரட்டும் வாக்கு வாதத்தையும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார்கள்.
டிஸ்சார்ஜ் செய்த பிறகு ஒரு குறிப்பிட்ட சமூக கட்சி ஆட்களை வைத்து மிரட்டி பணம் கேட்டனர். 1 லட்சத்தில் தொடங்கி 50,000, 25,000 என பேசினார்கள். தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுப்போம் என்றும் மிரட்டினார்கள். ஆனால் பணம் கொடுக்கவே முடியாது என்று மறுத்து விட்டோம்.
இதனால் தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். உடனே இந்த விஷயம் செய்திகளில் பரவியது. இதனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால், ஒப்பந்த செவிலியர் மீதோ ஊசி போட்ட செவிலியர் பயிற்சி மாணவர் மீதோ நடவடிக்கை இல்லை, மாறாக கண்ணகியை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
அவர் மீது எந்த தவறும் கிடையாது. உண்மையில் சிறுமிக்கு தவறான ஊசி போட்டதை கண்டறிந்து காப்பாற்றினார். செவிலியர் கண்ணகி மிகவும் நேர்மையானவர். இதுவரை யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை” என்று தெரிவித்தனர்.
நிர்வாகம் செய்த தவறுகளை மறைக்க அப்பாவியை பலிக்கடாவாகிவிட்டனர்.
சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி அலசி ஆராய்ந்து கண்ணகியை காப்பாற்றி நிர்வாகத்தை எச்சரிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் செவிலியர் சங்கத்தின் மாநில நிர்வாகி சக்திவேல்.
மோனிஷா
TNPL: மதுரை அணிக்கு 106 ரன்கள் இலக்கு!
ஆளுநருக்கு நாளை முதல்வர் பதில் கூறுவார் : அமைச்சர் ரகுபதி