கோவையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்டி அடித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற கார் வெடித்த விபத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதாக பாஜக குற்றம் சாட்டிவருகிறது.
இதனைக் கண்டித்து வரும் 31 ஆம் தேதி கோவையில் பந்த் நடத்தப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், பாஜகவின் பந்த் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
கார் வெடிப்பு வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் பாஜக தேவையில்லாமல் பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், பந்த் அன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் ஆதரவு தருமாறு பாஜக நிர்வாகிகள் அழுத்தம் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடத்தக்கூடிய பாஜகவின் இந்த பந்த்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜராகிய வழக்கறிஞர் பால் கனகராஜ், அண்ணாமலை எந்த ஒரு பந்த்க்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றும், மாவட்ட நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் தான் அந்த அறிவிப்பை வெளியிட்டார் என்றும் தெரிவித்தார்.
போராட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்காதநிலையில் முன்கூட்டியே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் பால் கனகராஜ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வரும் திங்கள்கிழமை பந்த் நடத்தினால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டால் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
கலை.ரா
ஜெ.வை விட பன்னீருக்கு சசிகலாதான் தேவை : கே.பி.முனுசாமி காட்டம்!