வடமாநிலத்தவர்களின் தமிழக வருகை அண்மைக்காலங்களாகவே அதிகமாகி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட இந்திய தொழிலாளர்கள் சாரை சாரையாக வரும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி விவாதப்பொருளாகி உள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் ரயில்வே, அஞ்சல் துறை, அனல்மின் நிலையங்கள், வருமானவரித் துறை, உளவுத் துறை, வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் பொதுப்பணித்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்காமல் வடமாநிலத்தவர்களுக்கே அதிகம் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் குக்கிராமங்களில் இருக்கும் அஞ்சல் அலுவலகங்களில் கூட ‘போஸ்ட் மாஸ்டர்’ பணிக்கு தமிழ் மொழி தெரியாத பீகார், உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலத்தவர்களே அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
அவ்வளவு ஏன், தமிழ் நாட்டின் சட்டப் பேரவை நடக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் அஞ்சலகத்திற்கு சென்றால்கூட வட இந்தியர்தான் இருக்கிறார். தமிழில் விலாசம் எழுதினாலோ அல்லது தமிழில் ஏதாவது கேட்டாலோ அவர்களுக்குப் புரிவதில்லை. ஆனாலும் அவர்கள்தான் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தலைமைப் பதவியில் ஒரு வட இந்தியர் அமர்த்தப்பட்ட பிறகு, அடுத்த கட்டமாக அவரது பரிந்துரையின் பெயரில் அவருக்கு கீழே உள்ள அனைத்துப் பதவிகளிலும் வட இந்தியர்கள் அமர்த்தப்பட்டு விடுகின்றனர்.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 1,600 பேர் வட இந்தியர்களாவர்.
இது மட்டுமின்றி சென்னை பெரம்பூர், கோவை என ரயில்வே பணிகளில் பிற மாநிலத்தவர்கள் 90 விழுக்காடு பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்கன்ட் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து ரயில்வே வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்குத் தேர்வு நடத்தி டிராக்மேன், போர்ட்மேன் போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானோரைப் பணியில் சேர்த்தனர்.
ஆனால், ரயில்வே ஆக்ட் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்து சுமார் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து பல ஆண்டுகளாக தமிழகத்தில் காத்திருக்கின்றனர். இதில், வேலை கிடைக்காத விரக்தியில் 28 பேர் உயிரை இழந்துள்ளனர்.
இது ஒருபுறமிருக்க மறுபுறம், கடந்த அக்டோபர் மாதம் ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவன பணித் தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 இளம்பெண்கள் ஜார்க்கன்டிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளுக்காகக் குடியேறிய வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் அதிகம் என்று நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநிலத்தவர் விரைவாகக் குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று பெற்று நிரந்தரமாகக் குடியேறுகின்றனர். மேலும், வாக்காளர் அட்டையும் பெறுவதால் தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாகவும் வட மாநிலத்தவர்கள் உருவெடுத்து வருகின்றனர்.
இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் யாவும் பறிக்கப்படுவதோடு மட்டுமின்றி எஞ்சியுள்ள அரசியல் அதிகாரத்தையும் வடமாநிலத்தவர்களிடம் முற்றாக இழந்து, தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே உடைமைகள், உரிமைகளற்ற அகதிகளாக, அடிமைகளாக வாழும் அவலநிலைக்குத் தள்ளப்படுவார்களே என்ற வேதனை அனைவரிடத்திலும் இருக்கிறது.
அதே நேரம், ஆந்திரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதுபோல் தனியார் நிறுவனங்களிலும் 80 விழுக்காடு வேலையினை தமிழர்களுக்கே ஒதுக்கத் தனிச் சட்டமியற்ற வேண்டுமென்றும்,
தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும்,
அவர்கள் தமிழ்நாட்டில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை பெறுவதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமெனவும்,
கடந்த அக்டோபர் மாதம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், வட மாநிலத்தவர்களின் தமிழக வருகையை தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கால்பந்து உலகக்கோப்பை: கானாவை வீழ்த்திய போர்ச்சுகல்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
Comments are closed.