கோவை சூலூரில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் வட இந்திய தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூரில் வட இந்திய தொழிலாளர்கள் சிலர் தமிழக இளைஞர்களைத் தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இந்நிலையில், கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உருட்டுக்கட்டைகளுடன் வட இந்திய தொழிலாளர்கள் புகுந்த காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள் உள்ளன.
அந்த விடுதி கேண்டினில் வட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று(பிப்ரவரி 13 ) கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய விடுதியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, உணவு பரிமாறுவதில் மாணவர்களுக்கும் வடஇந்திய தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதை பார்த்த மாணவிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்