விவசாயப் பணிகளிலும் களமிறங்கிய வடமாநிலத் தொழிலாளர்கள்!
தமிழ்நாட்டில் ஹோட்டல்கள், விடுதிகள், பார்லர்கள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நாற்று நடவு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இந்தமுறை போதுமான அளவு பருவமழை பெய்ததன் காரணமாக ராஜபாளையம், தளவாய்புரம், சேத்தூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது இரண்டாம் பருவத்துக்காக நெல் நாற்று நடவு செய்யும் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நாற்று நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளதால் பல இடங்களில் நடவு செய்யும் பணிக்கு வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, வேலையாட்கள் பற்றாக்குறையால் நாற்று நடவு பணிகள் தாமதப்படுவதைத் தவிர்க்க, வடமாநிலத்தில் விவசாயப் பணிகளில் முன் அனுபவம் பெற்று தற்போது வேலையில்லாமல் இருக்கும் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டு இங்கு விவசாயப் பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த 15 பேர் நெல் நாற்றுநடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், “தாமதமாக நாற்று நடவு செய்வதால், அறுவடையும் தாமதமாகிறது.
இதனால் ஏற்படும் நேர விரயத்தைத் தவிர்க்க அனுபவம் பெற்ற வட மாநிலத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம்.
மேலும், ஆள் பற்றாக்குறையால் நாற்றுக்கட்டுதல், சுமந்து வருதல், நடவுசெய்தல் என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக ஆட்களை அழைக்க வேண்டியிருக்கிறது.
இதனால் ஊதிய விஷயத்திலும் சங்கடங்களை எதிர்கொள்கிறோம்.
ஆனால், வடமாநிலத் தொழிலாளர்களை அழைப்பதன் மூலம் நாற்றுக்கட்டுதல் முதல் நடவு செய்து முடிக்கும் வரை எல்லா வேலைக்கும் சேர்த்தே கூலிபேசுவதால் வேலையும் விரைவாக நடப்பதுடன், ஊதிய விவகாரத்திலும் திருப்தியடைய முடிகிறது.
குறிப்பாக ஒருநாளைக்கு 5 ஏக்கர் வரைக்கும் நடவு நட்டுக்கொடுக்கின்றனர். இதனால் எங்களுக்கு எல்லா விதத்திலும் மிச்சப்படுகிறது” என்கின்றனர்.
வடமாநிலத் தொழிலாளர்கள் சார்பில் பேசியவர்கள், “நாற்று நடவு சம்பந்தமான எல்லா வேலைகளையும் செய்து தந்துவிடுகிறோம்.
இதன்மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 5,700 ரூபாய் எங்களுக்கு ஊதியமாக கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தனர்.
ராஜ்
குஜராத் அணியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்குமா கேகேஆர்!
அதிமுக பாஜகவிற்கு அடிமை என்றால் திமுக கொத்தடிமை: சீமான்
டிஜிட்டல் திண்ணை: மோடிக்காக காத்திருந்து எடப்பாடி, பன்னீர் ஏமாந்த கதை!