தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா மற்றும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 17) ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
இதனிடையே இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மதியம் ஒரு மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் தமிழகத்தில் (கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி) சம்பவம் தொடங்கிவிட்டது.
அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது மழை பெய்யும். மாஞ்சோலை மலை மற்றும் கோதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளைக் கவனிக்க வேண்டும்.
மணிமுத்தாறு & பாபநாசம் அணை இரண்டுமே உபரியாக இருக்கும். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
IPL2024: ரோஹித் மனைவி கொடுத்த ‘க்ளூ’… அப்போ அது கன்பார்ம் தானா?
லால் சலாம் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!