சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், நாவலூரில் நாளை(அக்டோபர் 19) முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
தலைநகர் சென்னையில் உள்ள மிக பிசியான சாலைகளுள் ஒன்று ஓ.எம்.ஆர் சாலை. 2000 ஆண்டு தொடக்கத்தில் இந்த பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதிக்க தொடங்கின.
தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த பகுதிக்கு படையெடுக்க, ஓ.எம்.ஆர் சாலை கடந்த 2008 ஆம் ஆண்டு ’ஐடி எக்ஸ்பிரஸ்வே’ ஆக உருமாறியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மேலும் இந்த பகுதியில் ஐடி நிறுவன ஊழியர்களுக்கான உயர் ரக குடியிருப்பு, கேளிக்கை தளங்கள் என பலதரப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் உலகதரத்தில் சீரமைக்கப்பட்ட ஓ.எம்.ஆர். சாலை சென்னையின் மிக பிஸியான சாலையாக உள்ளது. இதனையடுத்து, ஓ.எம்.ஆர். சாலையில், பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கரை ஆகிய பகுதிகளில் 5 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
நாவலூர் சுங்கசாவடியில் 2036ம் ஆண்டு வரை சுங்க கட்டணம் வசூலிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் கட்டணத்தை அதிகரிக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி கடந்த ஜூலை மாதம் நாவலூர் சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட கட்டணத்தின்படி, சரக்கு வாகனங்கள் மாதம் முழுவதும் பயணிக்க 3,365 ரூபாயும், கார், ஜீப், ஆட்டோ மாதம் முழுவதும் பயணிக்க 345 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
முதல்வர் அறிவிப்பு!
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,
“தென் சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இந்த அரசு பதவி ஏற்றவுடன், ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் (ஓ.எம்.ஆர்) உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலைப் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது.
இதனால், இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர்.
தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன.
இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்று, நாளை (அக்டோபர் 19) முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
லியோ புக்கிங்கை தொடங்காத சென்னை தியேட்டர்கள்… ’ரோகிணி’ அதிர்ச்சி முடிவு!
லியோ திரைப்படம்: இணையத்தில் வெளியிட தடை!