சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கிகள்!
அமைதியான ரயில் நிலையம் என்று சென்ட்ரல் ரயில்நிலையம் இருக்கும் என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகவும் தமிழகத்தில் இருக்கும் பழைய ரயில் நிலையமாகவும் சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையம் இருந்து வருகிறது.
சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் சென்று வருகின்றன. தினசரி லட்சக்கணக்கான மக்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
மற்ற ரயில் நிலையங்களில் இருப்பது போல சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ஒலி பெருக்கி மூலமாக ரயில்களின் விவரம் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் பயணிகளும் ரயில்களை சரியான நேரத்திற்குப் பிடிப்பதற்கு வசதியாக இருந்தது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி சென்ட்ரல் ரயில்நிலையம் அமைதியான ரயில் நிலையமாகச் செயல்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் ரயில்களின் விவரங்கள் அறிவிக்கப்படாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.
அதற்குப் பதிலாக நடைமேடை எண், ரயில்களின் எண், ரயில்கள் புறப்படும்-வந்தடையும் நேரம் என அனைத்துத் தகவல்களும் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும்.
மேலும் பயணிகளுக்கு உதவி மையங்கள் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்தது.
ஒரே நேரத்தில் பல்வேறு அறிவிப்புகள் மிக சத்தமாக ஒலிபரப்பப்படுகின்ற காரணத்தால், பயணிகளுக்கும், பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கும் ஏற்படும் சிரமத்திற்குத் தீர்வுகாணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்தது.
இந்த நடைமுறை சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் தரப்பில் இருந்தும் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் தரப்பில் இருந்தும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தை அமைதியான நிலையமாக வைத்திருக்க செயல்படுத்தப்பட்ட நடைமுறைகள் திரும்பப் பெறப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கிகள் மூலம் ரயில்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
மோனிஷா
உலகம் சுற்றும் வாலிபன்: அஜித்தின் அடுத்த பிளான்!
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் : பீகாரில் ஒருவர் கைது!