வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் பாஜக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இதனால் போலி வீடியோக்கள் பகிர்ந்தவர்களை கண்டறிந்து பீகார் போலீசாரும், தமிழ்நாடு போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.
உத்தரப் பிரதேச பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிபவருமான பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் முன் ஜாமீன் கேட்டு உம்ராவ் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த மார்ச் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இவ்வழக்கு இன்று (மார்ச் 17) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, இரு மாநில தொழிலாளர்களுக்கு மத்தியில் பிரச்சனையை உருவாக்கும் விதமாக உம்ராவ் ட்வீட் செய்துள்ளார்.
இவர் இப்படி ட்வீட் செய்வது முதன்முறை கிடையாது. பலமுறை பொய்யான ட்வீட் பதிவிட்டுள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு , வடமாநில விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைத்தது. இதனால் அமைதியான சூழல் ஏற்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வட மாநிலத்தவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். வட மாநிலத்தவர்கள் பாதுகாப்புக்காக உதவி நம்பரும் அறிவிக்கப்பட்டது.
தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உதவி நம்பருக்கு அழைத்தனர். தமிழக அரசு விரைந்து செயல்பட்டதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படவில்லை. எனவே பிரச்சினையை உருவாக்கிய இவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.
இதை விசாரித்த நீதிபதி இளைந்திரையன், ”பிரசாந்த் குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். ஒரு வழக்கறிஞர் இதுபோன்ற வீடியோக்களை ஏன் பகிர வேண்டும். இதன் தீவிரத் தன்மை அவருக்கு தெரியாதா?.
எவ்வளவு பிரச்சினை இதனால் ஏற்படுகிறது. இதுபோன்ற பதிவால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். உடனடியாக கிளம்ப வேண்டும் என ரயில் நிலையங்களில் குவிந்தனர்.
ஒரு ரயிலில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பயணித்ததை நானே நேரில் பார்த்தேன். இப்படி செய்தது ஏன்?. இது போன்ற வீடியோக்களின் தீவிரத் தன்மை ஒரு வழக்கறிஞருக்கு தெரியுமா? தெரியாதா?. அவருக்கு சமூக பொறுப்பு இல்லையா? சமூக பொறுப்பு இல்லாமல் இதை ட்வீட் செய்தது ஏன்?. ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு அவசியம்” என்று கூறி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
பிரியா
சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் பெயரில் புதிய கேலரி
சட்டை பட்டனை கழட்டிவிட்டு சல்யூட்: உதயநிதியை தாக்கும் ஜெயக்குமார்