தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் போதைக்கு எதிரான மினி மாரத்தான் நடைபெற்றது. அதில் அமைச்சர் மா. சுப்ரமணியன், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தற்போது தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு குறைந்துள்ளது. 169 டன் பான்பராக் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுதல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கஞ்சா பக்கத்து மாநிலங்களில் இருந்தே இங்கு கொண்டுவரப்படுகிறது. அதையும் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது தமிழகத்தில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து மா.சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மருந்து தட்டுபாடு என்ற மாய தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டாம்.
தமிழ்நாட்டில் உள்ள 32 மருந்து கிடங்குகளில் எவ்வளவு மருந்துகள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் மட்டும் அல்ல அரசியல் கட்சி தலைவர்கள் கூட அங்கு சென்று தெரிந்து கொள்ளலாம். 104 என்கிற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து இல்லை என்று சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கலை.ரா