முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உரிய வசதி இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் நொந்துபோய் பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷ சாராயம் குடித்துப் பாதிப்புக்குள்ளானவர்கள் பாண்டிச்சேரி காலாப்பட்டில் உள்ள பிம்ஸ், ஜிப்மர், திண்டிவனம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் மொத்தம் 59 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூன்று பேர் மருத்துவம் வேண்டாம் என்று ஓடிவிட்டனர். எட்டு பேர் இறந்துவிட்டனர், மீதி 48 பேர் தற்போது வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மே 15ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர பயணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும், சிகிச்சை அளிக்கப்படுவது பற்றி தெரிந்துகொள்ளவும் சென்றார்.
மருத்துவமனைக்குள் நுழைந்ததும் முதல்வரை பார்த்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அவரது காதில் கேட்கும் அளவுக்கு சத்தம் போட்டு அழுதனர்.
“ஐயா, இந்த மருத்துவமனையில் சரியான சிகிச்சை இல்லை, நாங்கள் 80 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்துள்ளோம், இங்கே பாத்ரூம் வசதி இல்லை, சுகாதாரமும் இல்லை, தூய்மை பணிகளே இல்லை” என்று அழுகையுடன் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதையடுத்து ஐசியூ வார்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு உரிய வசதி இல்லாததைக் கண்டு டென்ஷனாகி விட்டார் என்கிறார்கள் சுகாதாரத் துறை வட்டாரத்தில்.
முதல்வருடன் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு சென்ற சில அதிகாரிகளிடம் பேசினோம்.
“முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கோரிக்கைகள் கேட்ட பின் ஐசியு வார்டுக்குள் போனார்.
உள்ளே நுழைந்ததும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளிடம் இந்த அறைக்கு ஏசி இல்லையா? வெண்டிலெட்டர் இல்லையா? எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்குறீங்க என்று கேட்டார்.
நோயாளிகள் தரையிலும் ஸ்ட்ரெச்சரிலும் படுத்து கிடந்ததை பார்த்தவர் கோபமாகிவிட்டார். உடனே அருகிலிருந்த அதிகாரிகள் முதல்வரிடம் ஏதோ சொல்லி கூல் செய்தார்கள்.
முதல்வரே நேரடியாகப் பார்த்து, ஏசி இல்லை, போதுமான அளவுக்கு வெண்டிலெட்டர் இல்லை. சொல்லப்போனால் மருத்துவமனையில் சரியான சிகிச்சை கொடுத்திருந்தால் உயிர் பலியை குறைத்திருக்கலாம் என்றார்.
போதுமான அளவுக்குச் சிறப்பு மருத்துவர்கள் இல்லை, பணியாளர்கள் இல்லை என்று வேதனைப்பட்டார்.
முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 1278 படுக்கை வசதிகள் உள்ளன. இருந்தாலும் சரியான பராமரிப்பும், மருத்துவ உபகரணங்களும் இல்லை. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துடுப்பு இல்லாத படகு போன்று உள்ளது.
துப்பரவு பணியாளர்கள் சரியாக வேலை செய்வது இல்லை. காரணம் அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியக்கப்பட்டவர்கள்” என்கிறார்கள்.
“முதல்வர் கோபத்தையும் எதிர்பார்ப்பையும் தற்போது சுகாதாரத் துறை செயலாளராகப் பதவியேற்றுள்ள ககன் தீப் சிங் பேடி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுள்ளது” என்கிறார்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர்.
-வணங்காமுடி
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம்: பொன்முடி