“திருவையாறில் புறவழிச்சாலை அமைக்க வந்தால் நானே நின்று தடுப்பேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் கண்டியூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கலந்துகொண்டு விவசாயிகளிடம் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திருவையாறில் புறவழிச்சாலை தேவையில்லை. விவசாயிகள் உள்ளிட்ட யாரும் சாலை விரிவாக்கம் செய்யுமாறு கேட்கவில்லை. அப்படி இருக்கையில் ஏன் இந்த அவசரம்? வளர்ந்துள்ள நெற்பயிர்களை மூடி மண்ணைக் கொட்டியுள்ளார்கள். பயிர்களை அழிப்பது, உயிர்களை அழிப்பதற்கு சமம். விவசாயிகளுக்கு பயிர்தான் உயிர்.

அரசியல் வலிமை, அதிகார வலிமை அற்ற எளிய மக்கள் என்பதால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற திமிரில் செய்ததுதான் இது. இதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். விளைநிலத்தை மூடிவிட்டு நீங்கள் சாலை போட முடியும். ஆனால், சாலையை அழித்துவிட்டு மறுபடியும் அதை விளைநிலமாக மாற்ற முடியுமா?
தஞ்சையில் பயிர்களை அழித்து சாலை போடுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
புறவழிச்சாலை வந்தால் அது மணல் திருட்டுக்குத்தான் பயன்படும். சம்பா அறுவடை முடிந்த பிறகு புறவழிச்சாலை அமைக்கலாமா என அனைத்து விவசாயிகளிடம் கலந்தாலோசித்து அதற்கு உரிய தொகை கொடுத்து அதன்பிறகு சாலை அமைப்பது என்பது ஓர் அணுகுமுறை.

ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் பயிர்களை அழித்து சாலை போடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போராடும் விவசாயிகளுக்கு நான் உறுதுணையாக இருப்பேன். சாலை போட வந்தால் நானே நின்று தடுப்பேன்” என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு ஆகிய ஊர்கள் வழியாக 6.74 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்