செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகை தந்தபோது எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் இணைய குற்றங்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(நவம்பர் 30)நடைபெற்றது. இதில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் படித்த இளைஞர்கள், வேலையில்லா பட்டதாரிகளின் செல்போன் எண், அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே அனைவரும் கவனமாக இருக்கவேண்டும். சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார்.
பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியது பற்றி டிஜிபியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சைலேந்திரபாபு, பிரதமர் வருகையின்போது குளறுபடிகள் நடந்ததாக எந்த தகவலும் இல்லை. நல்லமுறையில்தான் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு குளறுபடி இருந்ததாக SPGயிடம் எந்த குற்றச்சாட்டும் இல்லை.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை பயன்படுத்தக்கூடிய எல்லா உபகரணங்களும் பரிசோதிக்கப்பட்டு, அது பழுதடைந்து இருந்தால் அதை மாற்றி வேறு உபகரணங்கள் வாங்கக்கூடிய நடைமுறை 100 ஆண்டுகளாகவே இருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறையில்தான் அதிக எண்ணிக்கையில் தரமான உபகரணங்கள் உள்ளன.
அதி நவீன உபகரணங்களைதான் தமிழக காவல்துறை பயன்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களும் இங்கிருந்து கேட்டு பெறக்கூடிய அளவிலே அளவுக்கு அதிகமான உபகரணங்கள் நம்மிடம் இருக்கின்றன.
கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை குறித்து பதிலளித்த டிஜிபி, தமிழ்நாட்டில் உள்ள 15க்கும் மேற்பட்ட வழக்குகளை என்ஐஏ விசாரித்து வருகிறது. அதுதொடர்பான சில ஆலோசனைகள் செய்யப்பட்டது என்றார்.
தமிழகத்தில் அதிக வடமாநிலத்தவர்கள் வேலைதேடி வருகிறார்களே அவர்களால் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு டிஜிபி, ஒட்டுமொத்தமாக அனைத்து வடமாநிலத்தவரையும் குற்றம் சொல்ல முடியாது.
பலர் பிழைப்புத் தேடி வந்து ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுவது உண்மைதான் என்று டிஜிபி கூறினார்.
கலை.ரா
தி காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம்: சவால்விட்ட இயக்குநர்
இந்த வாரம் OTT ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்! லவ் டுடே முதல் வதந்தி வரை!