நெல்லையில் நடைபெற்றது ஆணவக் கொலை இல்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை கிராமத்தை சேர்ந்த முத்தையா, இட்டமொழி கிராமத்தை சேர்ந்த சுதா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுதாவின் வீட்டினர் இந்த காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜூலை 23 ஆம் தேதி இரவு காரம்பாடு ஓடை பகுதியின் ஓரத்தில் முத்தையா கழுத்து, வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து முத்தையாவின் தந்தை கன்னியப்பன் திசையன்விளை காவல்நிலையத்தில் தனது மகன் காதலித்த பெண்ணின் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஜாதி வெறியில் கொலை செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட திசையன்விளை காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கண்காணிப்பில், வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினரின் விசாரணையில் முத்தையா ஆணவக் கொலை செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
இது குறித்து திசையன்விளை காவல்துறை இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
”இறந்து போன முத்தையா அப்புவிளையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் தங்கையை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். இதனை அவரது தங்கை சுரேஷிடம் சொல்லி அழுதுள்ளார். இதனிடையே சுரேஷின் தங்கை இறந்து போன முத்தையாவின் உறவினரால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அது சம்பந்தமான வழக்கு நடைபெற்று வருகிறது.
இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு சுரேஷ் முத்தையாவை எச்சரித்துள்ளார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் ஜூலை 22 ஆம் தேதி மதியம் முத்தையா, தன்னை கிண்டல் செய்ததோடு தன்னை காதலிக்க வற்புறுத்தியதாக அழுது கொண்டே சுரேஷிடம் அவரது தங்கை கூறியுள்ளார்.
இதனால் முத்தையா உயிருடன் இருக்கும்வரை தங்கையிடம் பிரச்சனை செய்து கொண்டிருப்பான் என்று எண்ணி தனது உறவினர்களான மதியழகனிடமும், ஜெயபிரகாஷிடமும் தெரிவித்து முத்தையாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
ஜூலை 23 ஆம் தேதி சம்பவ இடத்தில் முத்தையாவும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது சுரேஷ் தனது தங்கையை கிண்டல் செய்தது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பின்னர் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் என மூவரும் தாக்கியதில் முத்தையாவின் நண்பன் சிறு காயங்களுடன் தப்பித்து சென்றுள்ளார். ஆனால் இந்த தாக்குதலில் முத்தையா கத்திக் குத்து காயங்களுடன் இறந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சுரேஷை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையில் இறந்து போன முத்தையா மற்றும் கொலை செய்த மூவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. முத்தையாவின் தந்தை கன்னியப்பன் அவருடைய மனுவில் தனது மகனின் மரணம் ஜாதிய வெறியில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருந்த நிலையில் போலீஸ் விசாரணையில் இது ஆணவக் கொலை இல்லை என்பது தெரியவருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
வசமாக சிக்கிய அதிகாரி: லஞ்ச பணத்தை விழுங்கும் வீடியோ!
‘இந்தியா’ கூட்டணிக்கு பெயர் வைத்தது யார்?