வரலாற்றில் முதல்முறையாக தேவர் ஜெயந்தியையொட்டி பல்வேறு இடங்களில் நடந்த விழாக்களில் சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழாக்கள் நடந்தன.
இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என்பதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனால் பசும்பொன் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளின் விழாக்கள், சடங்குகள் கட்டுக்கோப்புடன், பாதுகாப்பாக நடைபெற்று முடிந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் தேவர் ஜெயந்தி தொடர்பாக இன்று (நவம்பர் 2) தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், “வரலாற்றில் முதல்முறையாக தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன், மதுரை கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த விழாக்களில் சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை.
டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி தாமரைக்கண்ணன், மதுரை மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 34 எஸ்பிக்கள் மேற்பார்வையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ட்ரோன்கள், பதற்றமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
டிஜிபி சைலேந்திரபாபு, ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் பசும்பொன்னில் முகாமிட்டு அவ்வப்போது காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
பாதுகாப்பு பணியில் போலீசார் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வருடம் சிறு வன்முறை சம்பவங்கள் கூட நடைபெறவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
T20 WorldCup 2022: படமெடுக்கும் பங்களாதேஷை அடக்குமா இந்திய அணி?
பொன்னியின் செல்வன் வெற்றி : மணிரத்னம் செய்த ஏற்பாடு!