No GST on Pan.. but 18% GST on cream? : annapoorna owner srinivasan

பன்னுக்கு ஜிஎஸ்டி இல்ல.. ஆனா அதுல வைக்குற க்ரீமுக்கு 18% ஜிஎஸ்டியா? : குமுறிய தொழிலதிபர்.. நிர்மலா சீதாராமன் ஷாக்!

தமிழகம்

பன்னுக்கு ஜிஎஸ்டி இல்ல.. ஆனா அதுல வைக்குற க்ரீமுக்கு 18% ஜிஎஸ்டியா? என குமுறிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஸ்வீட், கார வகை உணவுப்பண்டங்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை டெல்லியில் இருந்து கோவைக்கு வந்திருந்த வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் மனுவாக அளித்திருந்தனர்.

இதனைதொடர்ந்து கொடிசியா வளாகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர், பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்றது. இதில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றார்.

Image

இந்த நிகழ்வில் மிக்சர், ஸ்வீட் மற்றும் உணவுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என தொழில் அமைப்பினர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தனர்.

வானதி சீனிவாசன் சண்டைக்கு வர்றார்!

இதுதொடர்பாக ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், “மேடம் ஸ்வீட்டுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி வச்சிருக்கீங்க… இன்புட் கொடுக்குறீங்க.. உணவுக்கு  5 சதவீதம் ஜிஎஸ்டி வரி வச்சிருக்கீங்க… இன்புட் கிடையாது. காரத்துக்கு 12% ஜிஎஸ்டி வரி வச்சிருக்கீங்க.

பேக்கரில ப்ரெட்டையும், பன்னையும் விட்டுட்டு மீதி எல்லாத்துக்கும் 28% வரை ஜிஎஸ்டி வரி போட்டு வச்சிருக்கீங்க.

உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் எங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர். அவர் கடைக்கு வந்ததும், ஜிலேபி சாப்பிடுவார், அதன்பின்னர் காபியும், காரமும் சாப்பிடுவார். அப்போது அவங்க கிட்ட, ’காரத்துக்கு 12% ஜிஎஸ்டி வரி’ என்று சொன்னால் உடனே சண்டைக்கு வர்றார். இது மாதிரி எங்களுக்கு தினமும் பிரச்சனை நடந்துட்டு இருக்கு.

ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு மாறி மாறி ஜிஎஸ்டி விதிப்பது எங்களுக்கு கஷ்டமாக இருக்கு.  கஸ்டமரும் சண்டைக்கு வர்றாங்க. Bunக்கு ஜிஎஸ்டி இல்ல. ஆனால் அதுக்குள்ள வைக்குற கிரீமுக்கு 18% சதவீத ஜிஎஸ்டி வரி வச்சிருக்கீங்க.

இத நாங்க கூறினால், அதற்கு கஸ்டமர். ’நீங்க பன்னயும், க்ரீமையும் தாங்க.. நாங்களே வச்சிக்கிறோம்னு சொல்லுறாங்க.’ கடைய நடத்த முடியல மேடம்.

அதனால ஸ்வீட், கார வகை உணவுப்பண்டங்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிச்சிருங்க” என்றார்.

மிக்சர், ஸ்வீட், காரம் உணவுகளுக்கு மாறுபட்ட ஜி.எஸ்.டி வரி; நகைச்சுவையாகப் பேசி கோரிக்கை விடுத்த ஹோட்டல் எம்.டி

தொடர்ந்து அவர், இந்த ஜிஎஸ்டி பிரச்சனை குறித்து எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் முறையிட்டால், “வடநாட்டில் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுறாங்க. அதனால தான் ஸ்வீட்டிற்கு 5 சதவீதமும், காரத்திற்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி போட்டுள்ளார்” என்கிறார்.

ஆனால் தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் இல்லை. இங்கு ஸ்வீட், காரம், காபி தான் அதிகமாக போகும். இவற்றுக்கு ஒரே மாதிரி ஜிஎஸ்டி போடுங்கள்” என்றார்.

இதையெல்லாம் அருகில் அமர்ந்திருந்த வானதி சீனிவாசனை பார்த்து சிரித்தபடியே கேட்டுக்கொண்டிருந்த மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ”நாம் மாநிலத்திற்கு மாநிலம் ஜிஎஸ்டி வரியை மாற்றுவதில்லையே?” என்றார். உடனே எழுந்து நின்ற சீனிவாசன், “எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டிய போடுங்க.. ஜிஎஸ்டி போடுவதில் கம்யூட்டரே திணறுது மேடம்” என்றார்.

தொடர்ந்து ஹோட்டலில் தங்கினால் அதற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி விகிதம் குழப்பமாகவும், அதிகமாகவும் உள்ளது. இதில் கட்டுப்பாடு வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு தொழில் முனைவோரும் நிர்மலா சீதாராமனிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பின்னர் தொழில் முனைவோர் மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “தொழில் வளர்ச்சிக்கு நல்ல அனுகூலமான மண்டலம் கோவை. கொடிசியா அமைப்பு அரசின் திட்டங்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிட்பி வங்கி கிளையினை கோவை குறிச்சி பகுதியில் திறந்துள்ளதை கூறிய அவர், 163 முக்கிய கிளஸ்டர்கள் இருக்கும் இடங்களில் சிட்பி குறித்து விசாரித்து இருக்கின்றனர். அடுத்த 3 வருடத்தில் 70 இடங்களில் கிளைகள் திறக்க சிட்பி முடிவு செய்துள்ளது.

மக்களின் குறைகளை கேட்பது அதிகாரிகளின் கடமை. ஜிஎஸ்டி கோரிக்கைகள் குறித்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் கட்டாயம் பேசுகின்றேன்.

ஜி.எஸ்டி, கஸ்டம்ஸ், வருமான வரித்துறை, எம்.எஸ்.எம்.இ, இ.ஒ.பி, கனரா வங்கி அதிகாரிகள் என பல துறை அதிகாரிகள் இங்கு வந்திருக்கின்றனர். நீங்கள் கொடுத்த மனு ஒவ்வொன்றுக்கும் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தோனிக்கு எதிராக கோலி போட்ட மாஸ்டர்-பிளான்: யஷ் தயாள் சுவாரஸ்ய தகவல்!

ஆத்திரத்தில் ‘ஓலா’ ஷோரூமை கொளுத்திய வாடிக்கையாளர்: நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *