யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்?: என்.பி.சி.ஐ மறுப்பு
யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தேசிய பரிவர்த்தனை கழகம் இன்று (மார்ச் 29) அறிவித்துள்ளது.
மக்களிடத்தில் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அதிகரித்துவிட்டது. சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்திகளும் அவ்வப்போது பரவி வந்தன.
இந்நிலையில், வணிகரீதியான யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய பரிவர்த்தனைகள் கழகம் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.
வணிக பயன்பாட்டுக்காக யூபிஐயை பயன்படுத்தி ரூ.2000 மேல் பணம் செலுத்துவதற்குக் கட்டணமானது ஏப்ரல் 1 தேதி முதல் 1.1 சதவீதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து என்.பி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “யுபிஐ இலவசமானது. வேகமானது, பாதுகாப்பானது, எளிதானது.
பெரும்பாலும் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளே பயன்படுத்தப்படுகின்றன. மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 99.9% பரிவர்த்தனைகள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளவையே.
இந்த பரிவர்த்தனைகளுக்குத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
அதேநேரத்தில் மொபைல் வாலட் எனப்படும் வங்கி சாராத பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே 1.1% கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்களும் வியாபாரிகளிடம் மட்டுமே வசூலிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு வசூலிக்கப்படாது.
வழக்கம் போல வங்கிக் கணக்கு வழியாக மேற்கொள்ளப்படும் சாதாரண யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது.
அனைத்து யுபிஐ ஆப்களிலும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு, வாலட் என விருப்பம் போலப் பரிவர்த்தனை முறையைத் தேர்வு செய்து பணம் அனுப்ப முடியும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று, “யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வங்கிக் கணக்கு வாயிலாகவோ, வாலட் வாயிலாகவோ பணம் செலுத்தும்போது எந்தவொரு வாடிக்கையாளரும் கட்டணம் செலுத்த தேவை இல்லை” என பேடிஎம் நிறுவனமும் இன்று தெரிவித்துள்ளது.
மோனிஷா
மத்திய அரசுக்கு எதிராக மம்தா தர்ணா!
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: முடிவைத் தீர்மானிக்கும் லைகா