கோயில் விழாக்களில் சாதி, நிற பாகுபாடு கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kalai

கோயில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது, அங்கு சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதி முருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு, “கோயில் என்பது ஒரு வழிபாட்டுத் தலமாகும். கோயில் என்பது அனைத்து பக்தர்களுக்கும் பொதுவானது. கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் கோயிலில் வழிபாடு செய்ய உரிமை உள்ளது.

ஒருவரின் சாதி, நம்பிக்கை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்த வழக்கில் பட்டியலின சமூகத்தினர் மற்றும் பழங்குடியினர் உட்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்தே விழா கொண்டாடுமாறு தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என வழக்கினை முடித்து வைத்து இன்று (செப்டம்பர் 10) உத்தரவிட்டனர்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share