“ஒரு மாசமா கரண்ட் இல்ல”: இரவில் மக்கள் சாலை மறியல்!

தமிழகம்

சென்னை மயிலை தொகுதிக்குட்பட்ட குட்டி கிராமணி தெருவில் தினசரி இரவு மின்சாரம் தடை படுவதால், அப்பகுதி மக்கள் நேற்று இரவு 11 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோடை காலம் தொடங்கி வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மறு பக்கம் மின் தடையும் மக்களை வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படுவதாக மக்கள் புகார் கூறி வருகின்றனர். 

இதுதொடர்பாக கடந்த மே 17ஆம் தேதி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “சென்னையில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு மின் தேவை அதிகமாக இருக்கிறது. சென்னையில் 66 மில்லியன் யூனிட் ஆக இருந்த மின்சார தேவை தற்போது 90 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கேபிளை மாற்றி புதிய கேபிளை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருவதால் மின் தடை ஒரு சில இடங்களில் ஏற்படுகிறது” என்று கூறியிருந்தார். 

ஆனால் மயிலை தொகுதிக்குட்பட்ட ராஜா அண்ணாமலைபுரம் அருகே உள்ள குட்டி கிராமணி  தெருவில் கடந்த ஒரு மாதமாக தினசரி மின் தடை ஏற்பட்டு வருகிறது.

இதனால் பொறுமையை இழந்த குட்டி கிராமணி  தெருவில் வசிக்கும் பொதுமக்கள், பெண்கள், கல்லூரி செல்லும் மாணவிகள் துர்காபாய் தேஷ்முக் சாலை சந்திப்பில் திரண்டு நேற்று இரவு 11 மணியளவில் திடீரென அடையாறு வழியே இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

“ஒரு மாசமா கரண்ட் இல்லாம தவிக்கிறோம், குழந்தைகள் எல்லாம் தூங்கமுடியாம கத்துறாங்க. விட்டு விட்டு வரும் மின்சாரத்தால் வீட்டில் இருக்கும் ப்ரிட்ஜ், மிக்சி, பேன் எல்லாம் ரிப்பேர் ஆகிறுது. என்ன சொன்னாலும், எத்தன புகார் கொடுத்தாலும் சரி பண்ண மாட்றாங்க. எங்களுக்கு நிரந்தர தீர்வாக தடையில்லா மின்சாரம் வேண்டும். அதுவரை இங்கிருந்து நகரமாட்டோம்” என சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாமல், துர்காபாய் தேஷ்முக் சாலையில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் முதல் திரு.வி.க பாலம் வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. மக்களின் திடீர் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்.  ஆனால், “எங்கள் தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இப்போது கூட அங்கு மின்சாரம் இல்லை. வேண்டுமென்றால் வந்து பாருங்கள். அரை மணி நேரமாக இங்கே நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் ஏஇ, ஜேஇ என மின் அலுவலர்கள் யாரும் வரவில்லை. எங்களால் கலைந்து போக முடியாது. கரண்ட்ட விட சொல்லுங்கள்” என்று வாகனங்களை மறித்து நின்று கொண்டிருந்தனர். 

நேரம் ஆக ஆக அந்த பகுதியில் நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. மறுபக்கம் செல்லும் வழியில் சில வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. 

தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசாருக்கும், அங்கு கூடியிருந்த பெண்களுக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

no current chennai people protest at midnight

அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட குட்டி கிராமணி  பகுதியைச் சேர்ந்த திவ்யா நம்மிடம் கூறுகையில்,  “தினமும் இரவு 8,9 மணிக்கு மின்தடை ஏற்பட்டால், அதிகாலை 3 மணிக்குதான் வருகிறது. இடையிடையே ஒரு நிமிடம், இரு நிமிடத்துக்கு விட்டு விட்டு மின்சாரம் வருவதால் வீட்டில் இருக்கிற எலக்ட்ரிக் பொருட்கள் எல்லாம் ரிப்பேர் ஆகிவிடுகிறது. எல்லாருமே கரண்ட் பில் கட்டுகிறோம். ஆனால் ஏன் இப்படி செய்கிறார்கள். இங்கு மெட்ரோ பணி நடக்கிறது. இந்த பணி ஆரம்பமானதில் இருந்தே இப்படிதான் நடக்கிறது.

அருகில் இருக்கும் கே.வி.பி.கார்டனில் இதுபோன்றுதான் பவர் கட் ஆனது. அந்த பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அடுத்த நாளே கேபிள் போட்டு மின் தடையை சரி செய்தனர். மினிஸ்ட்டரும் வந்து பார்த்தார்.  அப்போது, வாரத்தில் 6 நாள் கரண்ட் இல்லை என்றால் மக்கள் மறியலில் தான் ஈடுபடுவார்கள் என்று அவரே சொன்னார். 

இப்போது இவ்வளவு நேரம் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். ஆனால் மின் ஊழியர்கள் யாரும் வரவில்லை. போலீசார் எங்களையே சமாதானப் படுத்த முயற்சிக்கிறார்கள். 

ஈபி அலுவலகத்தில் சென்று முறையிட்டால், அப்போதைக்கு வந்து சரி செய்கிறார்கள். ஒருவழியாக மின்சாரம் வந்துவிட்டது என பெருமூச்சு விடுவதற்குள் மின் தடை மீண்டும் ஏற்படுகிறது” என்று கூறினார். 

no current chennai people protest at midnight

அதே தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஓம் பிரகாஷ் கூறுகையில்,  “5 நிமிடத்துக்கு ஒரு முறை மின்சாரம் வந்து போய்விடுகிறது. பேன், மிக்ஸி எல்லாம் நாங்கள் கஷ்டப்பட்டு வாங்குகிறோம்.  இப்படி விட்டு விட்டு வரும் மின்சாரத்தால் எங்கள் வீட்டு பொருட்கள் எல்லாம் பழுதாகிறது. கரண்ட் பில் கட்டவில்லை என்றால் வந்து பியூஸ் மட்டும் பிடுங்க தெரியும் போது, மின்சாரம் மட்டும் சரியாக விட தெரியாதா? ஓட்டு போட்ட நாங்கள் எல்லாம் ஏமாளிகளா?

அமைச்சர் செந்தில் பாலாஜி தடையில்லா மின்சாரம் என்று சொல்கிறார். ஆனால் மின் தடை ஏற்பட்டதால் தானே இங்கு வந்து நிற்கிறோம். அவரை எங்களிடம் வந்து பேச சொல்லுங்கள். சொகுசா இருந்து கொண்டு வெறும் அறிக்கையை விட்டுவிட்டு போனா எப்படி?” என கேள்வி எழுப்பினார். 

no current chennai people protest at midnight

சாலை மறியலில் ஈடுபட்ட குட்டி கிராமணி தெருவைச் சேர்ந்த பப்பிதா கூறுகையில், “ஒரு மாதமாக இங்கு சரியான மின்சாரம் இல்லை. 2 வாரத்துக்கு முன்பு இதே போல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது வந்து சரி செய்துவிட்டு போனார்கள். நான்கு நாட்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால் மீண்டும் தற்போது மின் தடை ஏற்படுகிறது. விடியற்காலை 3 மணி வரை மின்சாரம் வருவதில்லை.

அடுத்த வாரம் பள்ளிகள் எல்லாம் திறக்க போகிறார்கள். மின்சாரம் இல்லாமல் இரவெல்லாம் குழந்தைகள் தூங்காமல், பள்ளிக்கு சென்று தூங்குமா?.

எங்கள் தெருவுக்கு வரும் வயர்மேன் குடித்துவிட்டு வருகிறார். ஏதாவது கேள்வி கேட்டால் இருக்கிறதை எல்லாம் பிடுங்கி போட்டு போய்விடுவேன் என்கிறார். ஈபி ஆபிஸுக்கு போன் செய்தால் எடுப்பதில்லை. எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. மின் தடைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” என்று கூறினார். 

no current chennai people protest at midnight

இந்நிலையில் சாலை மறியல் நடந்த பகுதிக்கு வந்த பெண் காவல் ஆய்வாளர் புஷ்பா, “இந்த நேரத்துல எதுக்குமா போராடுறீங்க. இந்த நேரத்துல போராடுறது சரியா. இப்போ என்ன செய்ய முடியும். காலையில் வாங்க ஈபி ஆபீஸுக்கு போலாம். இங்கிருந்து கிளம்புங்கள்” என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பிரியா

படங்கள் : கிட்டு

கிச்சன் கீர்த்தனா: வாழைத்தண்டு பச்சடி!

“புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்கிறேன்”: தேவ கவுடா

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *