online gambling ban

ஆன்லைன் சூதாட்ட தடை – பேச அனுமதிக்கவில்லை : டி.ஆர்.பாலு

தமிழகம்

நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதாக திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று (மார்ச் 13) தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் அதானி விவகாரம் குறித்து தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியதை எதிர்த்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பாஜக மற்றும் காங்கிரஸ் எம்பிக்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்பி டி.ஆர். பாலு, “ஆன்லைன் தடை சட்டத்திற்காக கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். 2022 ஜூன் மாதம் நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்த குழு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக ஒரு சட்டவடிவை உருவாக்கி தமிழக அரசுக்கு அளித்தது.

அந்த சட்ட முன்வடிவு சரிபார்க்கப்பட்டு அவசரச் சட்டம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்த அவசர சட்டத்தை அப்படியே ஏற்று அவசரச் சட்டத்தை உருவாக்கலாம் என்று ஒப்புதல் அளித்தார்.

அதன்பின்னர் 2022 அக்டோபர் 17 அன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டம் ஏகமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இதனை வாங்கி வைத்துக் கொண்டு 142 நாட்கள் கழித்து மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்புகிறார்.

சட்டம் இயற்றுவதற்கு உங்களுக்கு தகுதி கிடையாது என்று அதனைத் திருப்பி அனுப்பினார். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டது சரியல்ல. ஏனென்றால் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில், “ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அனைத்து வடிவமைப்புகளும் மாநில அரசின் கீழ் வரும்” என்று கூறினார்.

இந்த அறிவிப்பை ஆளுநர் பார்த்தாரா இல்லையா? என்று தெரியவில்லை. ஆன்லைன் தடை சட்டத்தைத் திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உரிமை இல்லை என்று சொல்வது தவறு. இதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு. இதை சுட்டிக்காட்டுவதற்காகவும் உரியத் தீர்வை காண்பதற்காகவும் தான் கவன ஈர்ப்பு நோட்டீஸை கொடுத்திருந்தோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை 44 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் தோற்று, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
எனவே ஆன்லைன் சூதாட்டத்திற்குச் சட்டம் கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என்று 10,735 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

இதில் 99 சதவீதம் மக்கள் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் இது ஒரு நல்ல சட்டம், மக்களின் உயிரைக் காப்பாற்ற இதனை உடனே செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, அது குறித்து இன்று விவாதிக்க வேண்டும் என்று நேற்றே சொல்லியிருந்தோம். இன்று காலையும் இது தொடர்பாக வலியுறுத்தினோம்.

ஆனால் இது குறித்து விவாதிக்காமல் பாதுகாப்புத் துறை அமைச்சர் பேச ஆரம்பித்துவிட்டார். கேள்வி நேரத்தில் யாரும் பேசுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. ஆனால் நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் என்பதால் அவருக்கு அந்த அதிகாரம் உண்டு. அதை நாங்கள் குறை கூறவில்லை.

ஆனால் அதன்பிறகு பேசுவதற்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாங்கள் எங்களுக்குப் பேச வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் சபைத்தலைவர் அதைக் கேட்கவில்லை.

நீங்கள் நடந்து கொண்டது தவறு என்பதை சுட்டிக்காட்டும் விதமாக, சபைத்தலைவர் இன்று நடந்து கொண்ட விதம் மிகவும் தவறானது என்று அலுவல் ஆய்வுக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். மேலும் இந்த அலுவல் ஆய்வுக் குழுவில் இருக்க விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டு வெளிநடப்பு செய்தோம்” என்று பேசினார்.

மோனிஷா

திருச்சி இளைஞர் மரணம் எச்3என்2 காரணமா?: கொரோனா காரணமா?

ஆஸ்கரில் ஜொலித்த தீபிகாவின் அசுர வளர்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *