பணியில் இருக்கும் போது கண்டிப்பாக செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
பணியில் இருக்கும்போது காவலர்கள் யாரும் செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை ஏற்கனவே தமிழ்நாடு தலைமை வலியுறுத்தியிருக்கிறது. இதனை குறிப்பிட்டு மீண்டும் இன்று (ஜூலை 3) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் புதிதாக சென்னை ஆணையராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர்.
அதில், ’பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணிநேரத்தில் செல்போனை பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது. இக்கவனச் சிதறலால், பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
இதனை குறிப்பிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின்போது கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது என்பதை பணியை நியமிக்கும்போதும், பணியைப் பற்றி விவரிக்கும்போதும் காவல் ஆளிநர்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அதில், ‘போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற மிக முக்கியமான பணிகளில் ஈடுபடும் காவலர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து போக்குவரத்தை சரிசெய்வதும், போக்குவரத்து விதிமீறல்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் மிக முக்கியமானது என்பதால் இச்சமயங்களில், செல்போனை பயன்படுத்துவது காவல் ஆளிநர்களின் கவனத்தை திசை திருப்புகிறது.
எனவே, போக்குவரத்தை சரிசெய்தல் மற்றும் விதிமீறல்களைக் கண்டறிதலில் தொய்வு ஏற்படும் என்பதை உணர்ந்து காவலர்கள் பணி நேரங்களில் கண்டிப்பாக செல்போனை பயன்படுத்தக் கூடாது.
மிக மிக முக்கிய நபர்களின் பாதுகாப்பு, முக்கியப் போராட்டங்கள் இவ்வாறான முக்கியப் பணிகளின் போது காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கீழ் உள்ள ஆளிநர்கள் செல்போனை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, அனைத்து கூடுதல் காவல் ஆணையாளர்கள்.
இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் ஆகியோர் அவரவர்களின் கீழ் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் இந்த அறிவுறுத்தல்களை எந்த வித சுணக்கமும் இன்றி மிக கண்டிப்புடன் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இதை அனைத்து காவல் நிலைய தகவல் பலகைகளிலும் ஒட்டியும், தினமும் காலை ஆஜர் அணிவகுப்பின்போது இதை படித்துக் காட்டியும், இந்த அறிவுரையைக் கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
பிரியா
தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
திமுக எம்.பி ஞானதிரவியம் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!