கடந்த ஆண்டு ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் அதுகுறித்த தகவல் எதுவும் இடம்பெறாதது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருவிழாவான பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்காக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தைப்பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைததாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக பச்சரிசியை கிலோ ஒன்றுக்கு 35 ரூபாய்க்கும், சர்க்கரை கிலோ ஒன்றுக்கு 41 ரூபாய்க்கும், முழு கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவினத் தொகையாக 238.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரித்தொகுப்பானது குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் பணப்பரிசு குறித்த எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. இதனையடுத்து சமூகவலைதளங்களில் மக்கள் தங்களது ஏமாற்றத்தை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா