பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொள்ள உள்ள நிலையில், கருப்பு நிற உடைக்கு தடை விதித்து இன்று (ஜூன் 26) சுற்றறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் ஆளுநர் அனுமதி வழங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்படாமல் உள்ளது என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் வரும் 28ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டம் வழங்க உள்ளார்.
இதற்கிடையே தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி காட்டுவதற்கு சில அரசியல் கட்சிகள் மற்றும் மாணவ அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கசிந்துள்ளது.
இதனையடுத்து, பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல், இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில், ”பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. அச்சமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், கைப்பேசிகள் எடுத்துவருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்டக் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு!
அட… அதிமுகவில் சேர்ந்த திமுக அமைச்சரின் மாப்பிள்ளை!