தமிழக அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றின. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ராஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
இதில் பீட்டா தரப்பில் வழக்கறிஞர் ஷியாம் திவான், “காளைகள் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவதில்லை, அவை கட்டாயப்படுத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக கள ஆய்வு செய்து அளித்த அறிக்கைகள், ஆதாரங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு ஒரு கொடூரமான விளையாட்டு. அதில் மரணங்கள் ஏற்படுகின்றன. எனவே ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில், “ஜல்லிக்கட்டு போட்டிகளில் சில மரணங்கள் ஏற்படுவது உண்மைதான். இதை தடுக்க ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்தில் விதிகள் உள்ளன. இந்த விதிகள்படி மரணங்கள் தடுக்கப்படுகின்றன.
ஜல்லிக்கட்டு ஜாலிக்காகவோ, கேளிக்கைக்காகவோ விளையாடும் விளையாட்டு அல்ல. தமிழகத்தின் பாரம்பரிய, கலாச்சார விளையாட்டு.
ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டு காளைகளின் அங்கீகாரம் அதிகரிக்கும். அதன் மதிப்பு அதிகரிக்கும். காளைகளின் விலையும் மார்க்கெட்டில் அதிகரிக்கும்” என்று வாதிடப்பட்டது.
இதுபோன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரது தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தமிழக அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் செல்லும்.
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் இல்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் திருப்தி அளிக்கிறது என்று தெரிவித்த நீதிபதிகள், பீட்டா அமைப்பின் கோரிக்கையை நிராகரித்தனர்.
மேலும் ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இது கலாச்சார விளையாட்டா என்பதை மாநில அரசின் சட்டம் தான் தீர்மானிக்கும்.
அரசின் சட்டத்தில் எந்த தவறும் இல்லை. காளை துன்புறுத்தப்படுவதை தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
பிரியா
முதல்வராக சித்தராமையா: டி.கே.சிவக்குமார் சொன்ன தகவல்!
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இலாகா மாற்றம்!