ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை : உயர்நீதிமன்றம்

Published On:

| By christopher

No ban on Formula 4 car racing: High Court order

ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எந்த தடையுமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 29) உத்தரவிட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலைச் சுற்றி வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் 3.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயமானது தனியார் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கார் பந்தயம் நடத்தும் போது மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், எப்ஐஏ எனும் சர்வதேச அமைப்பு ஒப்புதல் பெறப்பட்டதா? மருத்துவமனைகளுக்கு இடையூறு இல்லாமல் மக்கள் செல்ல எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொதுமக்கள் பாதுகாப்பு, இயல்பான போக்குவரத்து ஏற்பாடு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இல்லாமல் செல்வது உள்ளிட்டவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதற்கான வரைபடமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் எப்ஐஏ சான்று வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சான்று இல்லாமல் பந்தயம் நடத்தப்பட மாட்டாது என அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என குறிப்பிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை வழக்கறிஞர், பந்தயம் நடக்கும் தினத்தன்று காலையில் தான் எப்ஐஏ ஆய்வு செய்யும் என விளக்கமளித்தார்.

இதையடுத்து, எப்ஐஏ சான்று நகலை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பினை மாலை 4.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து எப் ஐஏ அனுமதி அளிக்கும் பட்சத்தில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தலாம். எந்த தடையுமில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உத்தரவையடுத்து திட்டமிட்டபடி ஃபார்முலா 4 கார் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு!

சே… இவர்கள் எவ்வளவு கோழைகள்! மோகன்லால் பற்றி நடிகை பார்வதி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share